மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலாலசுந்தரம் ஊராட்சியில், திருஞானசம்பந்தம் வள்ளுவர் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட வள்ளுவ சமுதாய குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு இறந்தவர்களின் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல், வயல்வெளி வழியே எடுத்துச் செல்லும் அவலநிலை நான்கு தலைமுறைகளாக இன்று வரை தொடர்கிறது.
மயிலாடுதுறையில் சமீபத்தில் கனமழை பெய்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று வள்ளுவ தெருவைச் சேர்ந்த கனகராஜ் (80) வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்தார்.
இவரின் உடலை நல்லடக்கம் செய்ய முழங்கால் அளவு தண்ணீருடன் பல இன்னல்களுக்கு இடையே வயல்வெளி வழியே எடுத்து செல்லும் துயர நிகழ்வானது சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, “நாங்க நாலு தலைமுறையாவே ரோடே இல்லாமல், வயல் வழியாதான் சுடுகாட்டுக்கு போனவர்களை அடக்கம் பண்ண தூக்கிக்கொண்டு போகிறோம். நாங்களும் ஜெராக்ஸ் காப்பி வராதத்துக்கு முன்னாடி காலத்திலிருந்தே மனுவாக கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
எங்களுக்கு அப்ப தெரிந்தது எல்லாம் மனு கொடுக்கிறது மட்டும்தான். பாட்டன் பூட்டன் காலம் போய், எங்க காலமே வந்துவிட்டது. ஆனா, இப்ப வரை ரோடு மட்டும் போட்டபாடில்லை. வயல்ல வரப்பு கூட கொஞ்ச தூரம் தான் இருக்கும். மீதி தூரம் நடு வயல்ல தான் இறங்கி போக வேண்டும். சும்மா 250மீ தூரம் வயல்ல நடந்துதான் அந்த சுடுகாட்டுக்கு போக வேண்டும். வெயில் காலத்துல கூட தெரியவில்லை. இப்ப மழைக்காலம் வேற, இப்ப பெய்த மழையில் வயல்ல மூணு அடி ஆழத்துக்கு தண்ணி நிக்குது.