அவனுக்குத் திருவருள் புரிய சித்தம் கொண்டார் பெருமாள். திருவரங்கம், திருஇந்தளூர், தலைச்சங்காடு ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வழிபட்டால் அவன் சாபம் தீரும் என்பதை உணர்த்தினார்.
அதன்படி பூலோகம் வந்த சந்திரன் திருவரங்கம் சென்று அங்கு அமைந்திருக்கும் நெய்தல் பூக்கள் நிறைந்த புஷ்கரணியில் நீராடி, 15 ஆண்டு காலம் ரங்கநாதனைத் தரிசித்து தவம் செய்தான். பின்னர் மயிலாடுதுறை அருகிலுள்ள திருஇந்தளூரில், பரிமள ரங்கநாதரை வழிபட்டான். தொடர்ந்து இந்தத் தலத்துக்கு வந்துசேர்ந்தான்.
இங்கே, புஷ்கரணியில் நீராடி இங்குள்ள பெருமாளை ஆராதித்து வந்தான். விரைவில் சந்திரனுக்குக் காட்சியளித்த பெருமாள், தன் தலையில் பிறையைச் சூடி, சந்திரனின் சாபத்தைத் தீர்த்தருளினார்.

சந்திரனின் சாபம் தீர்த்த பெருமாள் இவர் என்பதால் ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ள அன்பர்கள், இந்தத் தலத்துக்கு வந்து பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு நன்மைகள் அடையலாம்.
இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி, இத்தலத்துப் பெருமாளை அர்ச்சித்து வணங்கினால், பாவங்கள் தொலையும். திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும். தியானக் கோலத்தில் அமர்ந்த நிலையில் இங்கு அருளும் நரசிம்மருக்குப் பானகம் நிவேதனம் செய்து, மாலை சூடி வணங்க ஆரோக்கியம் மேம்படும்.
எதிரிகள் தொல்லை விலகும். மனக்குறை தீரும். தீவினைகள் அகலும். ஆஞ்சநேயரை வணங்க சனிதோஷம் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள். மனோகாரகனான சந்திரனின் சாபம் தீர்த்த இத்தலத்துக்கு வந்து வழிபட்டாலே மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தீரும் என்கிறார்கள் பக்தர்கள்.
எப்படிச் செல்வது?: சீர்காழி – தரங்கம்பாடி சாலையில், தலைச்சங்காடு பேருந்து நிலையத்தில் இறங்கவேண்டும். அங்கிருந்து மேற்கு திசையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவில் நாண்மதியப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.