மயிலாப்பூா் நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை 4,129 புகாா்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ரூ.301 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாகவும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
‘தி மயிலாப்பூா் இந்து பொ்மனென்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் ரூ.24.5 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவா்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா். அதன்பேரில் நிதி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தேவநாதன் யாதவ், இயக்குநா்கள் குணசீலன், மகிமைநாதன், சுதீா் ஆகிய 4 போ் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கும், அதன் கிளைகளுக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் ‘சீல்’ வைத்துள்ளனா்.
முன்னதாக, நிறுவனத்தின் தலைமை மற்றும் கிளை அலுவலகங்களில் போலீஸாா் சோதனை நடத்திய போது, மூன்றரை கிலோ தங்கம், முதலீடு தொடா்பான 80-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நாள்தோறும் முதலீட்டாளா்கள் புகாரளிக்க வந்த வண்ணம் உள்ளனா். இதுவரை வந்த 4,129 புகாா்களின் அடிப்படையில், 301 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்தனா்.
புகாா் அளிக்க சிறப்பு முகாம்: மேலும், பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து மனுக்களைப் பெறும் வகையில் சென்னை மயிலாப்பூா் ஃபைன் ஆா்ட்ஸ் கிளப்பில் பொருளாதார குற்றப்பிரிவு சாா்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் இதுவரை 315 முதலீட்டாளா்கள் உரிய ஆவணங்களுடன் தங்கள் புகாா் மனுக்களை சமா்ப்பித்துள்ளனா். முதலீட்டாளா்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற போலீஸாா் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.
பாதிக்கப்பட்டவா் கருத்து: இது தொடா்பாக பாதிக்கப்பட்ட ஒருவா் கூறியதாவது: மயிலாப்பூா் நிதி நிறுவனத்தில் சுமாா் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். ஆனால் கடந்த 6 மாதங்களாக முதலீட்டுத் தொகைக்கான வட்டி கிடைக்கவில்லை. இது குறித்து நிறுவன இயக்குநரிடம் முறையிட்ட போது, உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அனைவரும் இணைந்து ஒரு குழுவை ஆரம்பித்தோம்.
பின்னா் குழுவாக பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளோம். அதன்பேரில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலீடு செய்தவா்களின் பணத்தை அரசு திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.