ஒரு முறை நானும் என் தங்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாமாப் பெண்ணை பார்க்க அவசரமாக ஆட்டோவில் சென்றபோது, தங்கையின் கைப்பையை ஆட்டோவில் தவறவிட்டு விட்டோம். ஆயிரத்தி சொச்சம் பணமும், அலுவலக அடையாள அட்டை, வங்கி பண பரிவர்த்தனை அட்டைகள் என்று அனைத்தும் அதில் இருந்தது. மாமாப் பெண்ணை பார்த்த பின், சிறிது நேரத்திற்குப் பிறகு தான் கைப்பையை தவறவிட்டதையே உணர்ந்தோம்.
என்ன செய்வதென்று புரியாமல், கவலையுடன் விடுதிக்கு திரும்பினோம். ஆனால் அடுத்த நாள் மாலையே, அந்த ஆட்டோ ஓட்டுநர், விடுதிக்கு வந்து “காலையில் வேறு அவசர வேலை இருந்ததால் இப்போதாம்மா வர முடிந்தது.. எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க” என்று சொல்லி, கைப்பையை ஒப்படைத்த போது நாங்கள் அடைந்த நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. மனப்பூர்வமான நன்றியை செலுத்தி, மகிழ்ச்சியுடன் பணம் கொடுக்க முனைந்த போது, அதை புன்னகையுடன் மறுத்து “பொருளை பத்திரமா வச்சுக்கோங்கம்மா” என்று சொல்லி சென்றதை இன்றளவும் மறக்கவில்லை. இப்படி நேரங்கெட்ட நேரத்திலும் நல்ல நம்பிக்கையான அனுபவங்களையே தந்திருக்கிறார்கள் சென்னையின் ஆட்டோ அண்ணாக்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, தி.நகர் பாண்டி பஜார் பக்கம் ஏதோ ஒரு அலுவலகத்தில் எழுத்துத் தேர்வு. அடையாறில் இருந்து பேருந்தில் திநகர் சென்று, நேரமாகிவிட்டதால் அங்கிருந்து ஆட்டோவில் அந்த அலுவலகத்திற்கு சென்று விட்டேன். பரீட்சைக்கு போனதால் வழியை எல்லாம் நோட் பண்ணல. எழுத்துத் தேர்வு முடிய 12 மணி ஆகிவிட்டது. “முடிவுகளை மெயில் பண்றோம்” னு சொல்லிட்டாங்க.
வெளியில வந்து பேருந்து நிறுத்தத்தை விசாரித்து… விசாரித்து… சந்து சந்தா நடந்து நடந்து… “ஹப்பா… கடைசியா ஒரு மெயின் ரோடு தெரியுது… இதுல எதாவது பஸ் ஸ்டாப் இருக்கான்னு பார்க்கலாம்” அப்படின்னு நினைத்து சந்துல இருந்து வெளியில வந்து எட்டிப் பார்த்தா… எதிர்த்தாப்புல ‘அண்ணா அறிவாலயமும், சன் டிவி சூரியனும்’ தெரியுது… “அடக்கடவுளே எங்கிருந்து எங்கடா நடந்து வந்திருக்கோம்” அப்படின்னு யோசிச்சு எனக்கே செம சிரிப்பாயிடுச்சு. அப்புறமா அங்கிருந்து 23சி பஸ் ஏறி அடையார் வந்தேன்.
ஒருமுறை ஊரில் இருந்து அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாம் வந்திருந்தாங்க. எங்கேயோ போயிட்டு பேருந்து நிறுத்தத்துக்கு போகணும். ஆட்டோ அந்த நேரத்துல கண்ல படல. சரின்னு நம்ம “நடராஜா சர்வீஸ்” ஸ்டார்ட் பண்ணேன். தம்பி கேட்டான், “இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்? பஸ் ஸ்டாப்க்கு எவ்வளவு தூரம் இருக்கு?” உடனே நான், “பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப் வந்துடும் டா” அப்படின்னு சொன்னேன்.
இந்த கேள்வியும் பதிலும் ரிப்பீட் மோட் ல போயிட்டே இருந்துச்சு. (தூரம் கொஞ்சம் அதிகம் தான்.. ஆனா அன்னைக்கு ஆட்டோ எதுவுமே அந்த நேரத்துல இல்ல.. அதனால அவங்களையும் நடக்க வைக்க வேண்டியதாயிடுச்சு). ஹாஸ்டல் வந்தவுடனே, தம்பி, என் ஃபிரண்டு கிட்ட “எவ்வளவு தூரம் எங்களை நடக்க வச்சுடுச்சு தெரியுமாக்கா? பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. பாலம் ஏறி இறங்கினா பஸ் ஸ்டாப்.. னு சொன்னுச்சுக்கா. ஆனா பாலம் ஏறுது… ஏறுது… ஏறுது… இறங்கவே மாட்டேங்குதுக்கா” அப்படின்னு சொல்ல.. அவன் சொன்ன விதத்தில் அனைவரும் சிரித்து விட்டோம். “என்னையும் இந்த பொண்ணு இப்படித்தான் தம்பி நடக்க வெச்சிருக்கு.. உங்களையுமா?” அப்படின்னு ஃபிரண்டும் சொல்லி ஒரே புலம்பல். எனக்கு சிரிப்பு.
இப்ப கூட, நான் “நடக்கிற தூரம் தான்” அப்படின்னு சொன்னேன்னா.. உடனே என் தம்பி மத்தவங்கள அலர்ட் பண்ணிடுவான். “என்ன டிஸ்டன்ஸ்னு கரெக்ட்டா பாத்துக்கங்க.. இல்லன்னா.. இது, ‘பாலம் ஏறி இறங்குனா பஸ் ஸ்டாப்’ னு சொல்லி சொல்லியே நம்மளை எக்கச்சக்கமா நடக்கவச்சிடும்” அப்படின்ற கிண்டல் இப்ப வரை தொடர்கிறது. சென்னை தந்த நல் அனுபவங்களும் நினைவில் நீங்காத, எப்போதும் தொடரும் தொடர்கதை தான்.