குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடனடி ஆற்றலை அளிக்கக்கூடிய சத்துள்ள நல்லதோர் உணவு, மரவள்ளிக்கிழங்கு. மலச்சிக்கலைப் போக்கி செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்தச்சோகையைக் கட்டுப்படுத்துகிறது. எலும்புகளை பலப்படுத்துகிறது. ஒற்றைத் தலைவலி, வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் போன்ற பல நோய்களைப் போக்குவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
கண்பார்வைத் திறனை அதிகப்படுத்துகிறது. இத்தனை நல்ல தன்மைகளைக் கொண்டிருக்கும் மரவள்ளிக் கிழங்கை எல்லோரும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவதில்லை.
தைராய்டு, அயோடின், புரோட்டீன் குறைபாடு உடையவர்கள், உடல் எடை அதிகம் உடையவர்கள், மூளை, நரம்பு மண்டல பாதிப்புகள், சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம் போன்ற பிரச்னை உடையவர்கள் மரவள்ளிக் கிழங்கைத் தவிர்த்தல் நல்லது.

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். மரவள்ளிக் கிழங்கு, வாதத்தை மிகுதிப்படுத்தும் என்பது சித்தர்கள் கூற்று. எனவே, கை, கால் வலிகளை அதிகப்படுத்த வாய்ப்புகள் இருப்பதால், இதை அளவோடு சாப்பிடுவது நல்லது.
மரவள்ளி கிழங்கைப் பச்சையாகச் சாப்பிடக்கூடாது. அவித்தோ, வறுத்தோ, கறி செய்தோ சாப்பிடலாம். மரவள்ளிக் கிழங்கில் இயற்கையாக இருக்கும் நச்சுப்பொருள்கள் (Cyanogenic Glycosides) சமைக்கும் போது மட்டுமே அழிக்கப்படுகின்றன. மரவள்ளிக் கிழங்கை நன்றாக ஊறவைத்து, முழுமையாக வேகவைத்துச் சாப்பிடும்போதுதான் அதில் உள்ள சத்துகள் நமக்குக் கிடைக்கின்றன.
இதனுடன் இஞ்சி, சுக்கு கலந்த உணவுப் பொருள்களை உட்கொள்ளக் கூடாது.”
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.