மராமத்து பணிக்காக பெரியாறு அணைக்கு கொண்டு சென்ற கட்டுமானப் பொருட்கள் தடுத்து நிறுத்தம் | Construction materials transported to Periyar Dam for repair work stopped

1342170.jpg
Spread the love

கூடலூர்: முல்லை பெரியாறு அணையில் மராமத்துப் பணிக்கான கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்ல கடந்த மே 7-ம் தேதி தமிழக அதிகாரிகள், கேரள நீர்வளத் துறையிடம் அனுமதி கேட்டனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட கேரள அதிகாரிகள், மராமத்து வேலைகள் மற்றும் வழக்கமான பணிகளுக்கு அனுமதி தரவில்லை.

இந்நிலையில், மராமத்துப் பணிகளுக்குத் தேவையான தளவாடப் பொருட்களை அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளதாக நவ. 29-ம் தேதி கேரள வனத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டு லாரிகளில் எம்.சாண்ட் மணல் நேற்று கொண்டு செல்லப்பட்டது. அப்போது, கேரளப் பகுதியான வல்லக்கடவு வனச் சோதனைச் சாவடியில் இந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

பெரியாறு புலிகள் சரணாலய இணை இயக்குநரின் அனுமதி இருந்தால் மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும் என்று கூறி, வாகனங்கள் செல்ல கேரள வனத் துறையினர் அனுமதி மறுத்தனர்.

அப்போது தமிழக அதிகாரிகள், ‘இதுகுறித்து ஏற்கெனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி வழக்கமான நடைமுறைதான்” என்று தெரிவித்தனர். இருப்பினும் கேரள வனத் துறையினர் பிடிவாதமாக இருந்தனர். இதையடுத்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறும்போது, “தமிழக நீர்வளத் துறையினர் கொண்டு சென்ற கட்டுமானப் பொருட்களை கேரள வனத் துறை அணைக்குள் அனுமதிக்காவிட்டால், எல்லைப் பகுதியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *