சென்னை: “அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கைச் சீமையின் தீரர்களான மருதிருவரைப் போற்றுகிறேன். விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்கு உரமாகியுள்ள மருது சகோதரர்களின் போராட்டமும் வீரமும் மக்கள் மனங்களில் என்றும் வாழும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கைச் சீமையின் தீரர்களான மருதிருவரைப் போற்றுகிறேன். விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்கு உரமாகியுள்ள மருது சகோதரர்களின் போராட்டமும், வீரமும் மக்கள் மனங்களில் என்றும் வாழும், என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று காலை மருது சகோதரர்களின் வாரிசுதாரர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ-க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், காமராஜ், ஜி.பாஸ்கரன், கோகுல இந்திரா, எம்எல்ஏ-க்கள் செந்தில் நாதன், ராஜன் செல்லப்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மதுரை ஆதீனம், இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன், மதிமுக சார்பில் எம்எல்ஏ பூமிநாதன், மாவட்டச் செயலாளர் பசும்பொன் மனோகரன் உள்ளிட்டோர் மரியாதை செய்தனர்.