சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 223-வது நினைவு நாளையொட்டி அவர்களது உருவப் படத்துக்கு ஆளுநர், அமைச்சர்கள், தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
விடுதலை வீரர்கள் மருது பாண்டியர்களின் 223-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். கிண்டி எம்ஜிஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்கள் உருவப் படத்துக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில், “அந்நியரின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற சிவகங்கைச் சீமையின் தீரர்களான மருதிருவரைப் போற்றுகிறேன். விடுதலை மற்றும் தியாகத்தின் அடையாளங்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்கு உரமாகியுள்ள மருது சகோதரர்களின் போராட்டமும் வீரமும் மக்கள் மனங்களில் என்றும் வாழும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு அமைச்சர்கள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகரராஜா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதேபோல், தமி்ழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மருது சகோதரர்களின் நினைவு நாளையொட்டி தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ்: உலகையே வளைக்க நினைத்த வெள்ளையர்களுக்கு எதிராக வீரத்துடனும், தீரத்துடனும் போர் புரிந்த மருதுபாண்டியர்களின் 223-ம் நினைவு நாள் இன்று. அவர்களின் வீரத்தையும், தீரத்தையும் போற்றுவோம். நாட்டைக் காப்பதில் அவர்களின் தியாகத்தை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்வோம். அவர்கள் தூக்கிலிடப்பட்ட இந்த நாள்தான் மண்ணுக்காக உழைக்க நாம் உறுதியேற்றுக்கொள்ள வேண்டிய நாளாகும். மண்ணைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராவோம்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: வீரத்தின் விளைநிலமாகவும், தியாகத்தின் திருவுருமாகவும் வணங்கப்படும் மருது சகோதரர்களை போற்றுவோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், “சிவகங்கை பாகனேரி பகுதியை ஆட்சி செய்த மன்னரும், மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு துணைநின்று ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவருமான வாளுக்கு வேலி அம்பலத்தின் நினைவு தினம் இன்று. நாட்டு மக்களுக்காக வளங்களை வாரி வழங்கியதோடு, அவர்களின் உள்ளத்தில் வீரத்தையும் விதைத்த தென்பாண்டிச் சிங்கம் வாளுக்கு வேலி அம்பலத்தின் கொடைப் பண்பையும், வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.