மானாமதுரை: மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட முயன்றோரை போலீஸார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர் கடையடைப்பு, அடுத்தடுத்த மறியலால் ஆலையை நிரந்தரமாக மூட அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட்டில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க கடந்த ஆண்டு பிப்.21-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆலைக்கு எதிராக சூரக்குளம் – பில்லறுத்தான், செய்களத்தூர் ஆகிய 2 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், எதிர்ப்பையும் மீறி ஆலை கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது. இதைக் கண்டித்து அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சினர் மற்றும் விவசாய சங்கங்கள் தனித் தனியாக போராட்டம் நடத்தனர். தொடர்ந்து ஆலை கட்டுமானப் பணியை அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிட்டார். ஆனாலும் சில வாரங்களிலேயே மீண்டும் கட்டுமானப் பணியை தொடங்கி, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
விரைவில் ஆலை திறக்கப்பட உள்ள நிலையில், கடந்த மாதம் அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இணைந்து, மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவை ஏற்படுத்தினர். தொடர்ந்து அந்த குழுவினர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, எம்எல்ஏ-க்கள் தமிழரசி, செந்தில் நாதன் ஆகியோரிடம் முறையிட்டனர். அதன் பின்னரும் நடவடிக்கை இல்லாததால், கடையடைப்பு, முற்றுகை போராட்டம் அறிவித்தனர்.
இதையடுத்து, நேற்று போராட்ட குழுவினரை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமரசப்படுத்த முயன்றுள்ளனர். இருப்பினும் அதை ஏற்க மறுத்து இன்று மானாமதுரை முழுவதும் 100 சதவீதம் கடைகள் அடைக்கப்பட்டன.
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ், தவெக, நாம் தமிழர் கட்சி, விசிக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், மானாமதுரை நகராட்சி மற்றும் சூரக்குளம் – பில்லறுத்தான், செய்களத்தூர், கல்குறிச்சி, மாங்குளம் உள்ளிட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த பல ஆயிரம் மக்கள் சிப்காட் வளாகத்தில் உள்ள மருத்துவக் கழிவு ஆலையை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர்.
அவர்களை போலீஸார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். போராட்டக் குழுவினர் தடுப்புகளை தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்று ள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை சமரசப்படுத்தி, சிலரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், கோட்டாட்சியர் ஜெபி கிரேஸியா, வட்டாட்சியர் கிருஷ்ணகுமார் ஆகியோர் போராட்டக்குழுத் தலைவர் வீரபாண்டி, வர்த்தக சங்கத் தலைவர் பால குருசாமி உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே 3 மணி நேரத்துக்கு மேலாக பேச்சுவார்த்தை நீடித்ததால் சந்தேகம் அடைந்த மக்கள் சிவகங்கை – மானாமதுரை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அவ்வழியாக போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, வேறு வழியில் வாகனங்கள் மாற்றிவிடப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிவில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட அரசுக்கு பரிந்துரை செய்து 2 மாதங்களுக்குள் உரிய உத்தரவை பெற்று தருவது, அதுவரை ஆலை கட்டுமானப் பணியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. கட்டுமானப் பணி நடைபெறாமல் இருப்பதை காவல் துறை மூலம் கண்காணிப்பாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.
சுமார் நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.