மருத்துவம், பொறியியலைவிட விளையாட்டுத் துறை அழகானது! -மனு பாக்கர்

Dinamani2f2024 08 162fdmi8ee5d2fmanu20bhaker 1.jpg
Spread the love

மருத்துவம், பொறியியலைவிட விளையாட்டுத்துறை அழகானது என்று பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசுகையில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் தொடங்கிய எனது பயணத்தை, மீண்டும் நம்பிக்கையுடன் தொடங்குவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. வெற்றி மற்றும் தோல்வியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.

அது தான் விளையாட்டின் அழகு. ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் நீங்கள் மற்றொரு போட்டியில் வெற்றி பெற முடியும். ஆனால், உங்களது கடின உழைப்பைக் கொடுத்தால் தான் அந்த வெற்றி உங்களுக்கு சாத்தியமாகும். ஒரு இலக்கை அடைய அதிகப்படியான உழைப்பு மற்றும் முயற்சி தேவையானதாகும்.

எப்போதும் பெரிய இலக்குகளை நோக்கி பயணிக்கும் போது தொடக்கம் என்பது பெரிதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அந்த இலக்கினை அடைய அதிகளவில் கடின உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். உங்களது இலக்கு பெரியதாக இருந்தால், உங்களால் பெரியளவில் சாதிக்க முடியும்.

நான் எந்தப் போட்டியில் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் எப்போதும் தன்னம்பிக்கையுடன் தான் இருப்பேன். நமக்கு வாழ்வில் சிறந்து விளங்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

மருத்துவர், பொறியாளராக உருவாக வேண்டும் என்று அவசியமில்லை. விளையாட்டுத் துறை மிகவும் அழகானது. எனது அம்மா தான் எனக்கு முன்னுதாரணம். அவர் தான் எனக்கு வழிகாட்டினார். பெற்றோரின் ஆதரவு இல்லாமல், ஒரு குழந்தை எதுவும் செய்ய முடியாது.

எனது துப்பாக்கி சுடும் வாழ்க்கையும், பயணமும் எனதுப் பள்ளியில் தொடங்கியது. நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் முக்கிய பங்கு இருக்கின்றது.

எனது துப்பாக்கிச் சுடும் பயணம் என்னுடைய எட்டரை வயதில் தொடங்கியது. நான் உலகில் உள்ள பாதி நாடுகளுக்கு பயணித்துள்ளேன். நான் பல்வேறு விதமான மக்கள், கலாசாரத்தையும் பார்த்திருக்கிறேன். ஒருவருடைய வாழ்க்கைப் பயணத்தில் அவர்களது வாழ்க்கைப் பின்னணி குறித்து ஒருபோதும் கவலைப்படக்கூடாது.

நீங்கள் அதை பெருமையாக நினைக்க வேண்டும். உங்களைப் பற்றி நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு தூரம் வந்தீர்கள் என்பதைப் பற்றி சிந்திக்காமல், நீங்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் எனக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரியாது. மக்களுடனும் எப்படி பேசுவதென்று தெரியாது. ஆனால், அதை நானேக் கற்றுக்கொண்டேன். பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்ள மக்கள் எனக்கு உதவி செய்தனர். நீங்கள் ஒரு ஆசிரியரிடமோ அல்லது உங்கள் பெற்றோரிடமோக் கேட்டு புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம்.

நீங்கள் தேர்வில் வெற்றியடையவில்லை அல்லது தேர்வில் சிறப்பாக செயல்படவில்லை என்றால், விட்டுவிடாதீர்கள். மீண்டும் எழுந்திருங்கள், தொடருங்கள்” என்று கூறினார் மனு பாக்கர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *