சென்னை: மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை விற்பனை செய்த 266 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. முறைகேடுகள், விதிமீறல்கள் கண்டறியப்படும்போது, விசாரணை நடத்தி, வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், சில மருந்தகங்களில் மன நல மாத்திரைகள், வலி நிவாரண மருந்துகள், தூக்க மாத்திரைகள், கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட மருந்து கடைகளில் சட்ட விரோத விற்பனை நடந்திருப்பதை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்தனர்.
அடிமைப்படுத்தும் மருந்துகளை தொடர்ந்து விற்பனை செய்து வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்க விழுப்புரம், திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்டன. முழுமையாக விசாரணை நடத்தி முதல்கட்டமாக மருந்தகங்கள், மொத்த விற்பனை நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதர் கூறுகையில், “மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்வது தவறானது. சில முக்கிய மருந்துகளை அதுபோல் விற்பனை செய்வது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் தற்போது வரை ரசீது இல்லாமல் மருந்து விற்பனையில் ஈடுபட்ட 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மருத்துவர்களின் பரிந்துரையின்றி கருத்தடை மாத்திரை, தூக்க மாத்திரை விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்ட 31 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 56 மொத்த விற்பனை நிறுவனங்களின் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன” என்றார்.