Last Updated:
இனி வரும் மாற்றங்களின்படி, மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.
மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இனி இருமல் மருந்து வாங்க முடியும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவர முடிவு செய்துள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். கலப்பட இருமல் மருந்தால் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் இந்த புதிய கட்டுப்பாடு வர உள்ளது.
தற்போது உள்ள விதிகளின்படி மருந்து விநியோகிப்பதற்கான உரிமம் இன்றி இருமல் மருந்தை விற்பனை செய்ய முடியும். இனி வரும் மாற்றங்களின்படி, மருந்து விற்பனை நிலையங்களில் மட்டுமே இனி இருமல் மருந்து விற்பனை செய்யப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நச்சுத்தன்மையுள்ள ரசாயனம் கலந்த கோல்ட்ரிஃப் எனப்படும் இருமல் மருந்தை உட்கொண்டதால், ம.பி. மற்றும் ராஜஸ்தானில் மொத்தம் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இருமல் மருந்து
குழந்தைகளின் உடற்கூராய்வில் சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் டையெத்திலீன் கிளைகோல் (diethylene glycol) எனப்படும் தொழில்துறை ரசாயனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமாக (48.6%) கலந்திருந்தது கண்டறியப்பட்டது தெரியவந்தது. இது பெயிண்ட் மற்றும் மை போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும். இதையடுத்தே இருமல் மருந்து தொடர்பான பிரச்னை வெளிச்சத்துக்கு வந்தது. சம்பந்தப்பட்ட மருந்தை தயாரித்த நிறுவனம் தமிழ்நாட்டை சேர்ந்தது என்பதால் தமிழ்நாடு அரசு அந்நிறுவனத்தின் மீதான உரிமத்தை ரத்து செய்ததுடன், நிறுவனத்தின் வேதியியல் ஆய்வாளரை கைதும் செய்தது. தற்போது இதுதொடர்பான வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றன.
November 18, 2025 2:19 PM IST
