லக்னௌ: மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட கூட்டத்துக்குப் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
கட்சியை வலுப்படுத்துவது குறித்து நாடு முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளுடனான உயர்மட்டக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் பேசிய மாயாவதி, பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சி மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் ஸ்ரீ கன்ஷி ராம், தான் உயிருடன் இருக்கும் வரை கட்சியில் தனது வாரிசை அறிவிக்கப் போவதில்லை என்றும் தனக்கு கட்சியும் இயக்கமும் உயர்ந்தது. உறவுகள் பின்னர் வரலாம் என்றார். மேலும் குடும்ப உறுப்பினர்கள் கட்சியில் பணியாற்றுவதை அவர் எதிர்க்கவில்லை என்றாலும், அவர்களில் யாராவது தனது பெயரை தவறாகப் பயன்படுத்தி கட்சிக்கோ இயக்கத்திற்கோ தவறு இழைத்தால், அவர்களை உடனடியாக நீக்கப்படுவார் என்பதில் அவர் தெளிவாக இருந்தார் என்று கூறினார்.
அவரது கொள்கையின்படி, கட்சியில் கோஷ்டி பூசல், கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் ஆகாஷ் ஆனந்தின் அரசியல் வாழ்க்கையையும் தடம் புரளச் செய்த அவரது மாமனார் அசோக் சித்தார்த்தை கட்சியிலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்ட நிலையில், மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், அவர் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாககவும், தான் உயிருடன் இருக்கும் வரை கட்சியில் தனது வாரிசை அறிவிக்கப் போவதில்லை என மாயாவதி அறிவித்தார்.