மருமகளுக்கு கல்தா, மகளுக்கு பதவி : பொதுக்குழுவில் ராமதாசு எடுத்த புதிய அஸ்திரம்  – Kumudam

Spread the love

மருமகளுக்கு கல்தா: மகளுக்கு பதவி 

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இன்று தொடங்கியது.இன்று நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸை தலைவராக தேர்வு செய்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், வேட்பாளர்களை தேர்வு செய்யும் முடிவை ராமதாஸ் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அன்புமணியை பாமகவில் இருந்து நீக்கியதையும் அங்கீகரித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணியை நீக்கம்செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அன்புமணி ஜீரோ ஆகிவிடுவார்: அருள் எம்எல்ஏ சாபம்

பொதுக்குழுவில் பேசிய அருள் எம்எல்ஏ:  அன்புமணிக்கு எத்தனை பதவிகள் வழங்கியுள்ளார் ராமதாஸ்; அத்தனையையும் அன்புமணி மறந்துவிட்டார். பெற்ற தந்தை மீது மைக்கை தூக்கி எறியும் அன்புமணி ஒரு மகனா என்று பாமக தொண்டர்கள் கூறுகின்றனர். பாமகவில் இருந்தவர்கள் மிரட்டி அழைத்துச் சென்றுள்ளார் அன்புமணி. தேர்தலுக்கு பிறகு அன்புமணி ஜீரோ ஆகிவிடுவார். சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்துவிட்டு ரத்துசெய்தவர் அன்புமணி. அன்புமணி பக்கம் தொண்டர்கள் இல்லை, பொய்யர்களும் பொய்யர் கூட்டமும்தான் இருக்கின்றன என ஆவேசமாக பேசினார். 

பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேசுகையில்: அன்புமணியால் டாக்டர் ராமதாஸ் கண்கலங்கினார். பாமக ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தை சதியால், சூழ்ச்சியால் அபகரிக்க நினைத்தால் நடக்காது. பதவி ஆசையால் உருவாக்கப்பட்டது பாமக அல்ல.

பாமகவை அன்புமணியால் கைப்பற்ற முடியாது: ஜி.கே.மணி

பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் அன்புமணியுடன் சென்றுள்ளார்கள். தற்போது அன்புமணியை நம்பி சென்றவர்கள் கலக்கமடைந்துள்ளனர். அன்புமணி செய்வது மாபெரும் துரோகம். உங்கள் ஒரு மகன் அபகரிக்க நினைத்தால், உங்களுக்கு லட்சம் மகன்களாக நாங்கள் நிற்கிறோம்.

ராமதாசுக்கு அன்புமணி செய்தது துரோகம்… துரோகம்… துரோகம்.. அன்புமணிக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். பாமகவை உங்களால் கைப்பற்ற முடியாது. பாமக என்றால் ராமதாஸ், ராமதாஸ் என்றால் பாமக. அன்புமணியின் துரோகம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இனி எடுபடாது. அன்புமணியின் அரசியல் கதை முடிந்தது; இனி வேறு வழி பாருங்கள். தை பிறந்தால் வழி பிறக்கும்… அதுபோல பாமகவுக்கு அடுத்த ஆண்டு நல்ல காலம் பிறக்கும். இவ்வாறு ஜி.கே.மணி பேசினார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *