“மறுசீரமைப்பால் இந்தி பேசும் மாநிலங்களில் 200 தொகுதிகள் அதிகரிக்க வாய்ப்பு” – செல்வகணபதி எம்.பி | Central govt constituency delimitation is disaster for TN : Salem MP Selvaganapathy

1352302.jpg
Spread the love

சேலம்: “மத்திய அரசின் தொகுதி மறுவரையறை கொள்கையால் தென்மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதால், அபாய மணியை ஒலித்து முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்,” என்று சேலம் எம்.பி. செல்வகணபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையால், இந்தி பேசும் மாநிலங்களில் 200 தொகுதிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து சேலம் எம்.பி டி.எம்.செல்வகணபதி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறையால் தமிழகத்துக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், அபாய மணியை ஒலிக்கவிட்டு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மறுவரையறை செய்யும் போது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் அதிக பாதிப்பை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

கடந்த 1976-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறைக்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியதால், அக்கொள்கையை 25 ஆண்டுக்கு ஒத்திவைத்தனர். இதேபோல 2002-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது, அப்போதைய பிரதமர் அடுத்த 25 ஆண்டுக்கு மறுவரையறை செய்யக் கூடாது என திருத்தம் கொண்டு வந்தார்.

தற்போது மீண்டும் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது தமிழகத்துக்கான 39 தொகுதிகள் 31 தொகுதிகளாக குறைந்து விடும். தென்மாநிலங்களில் உள்ள 139 தொகுதிகள் 103 தொகுதிகளாக குறையும். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதற்காக மக்களவைத் தொகுதிகளை குறைத்து தமிழகத்துக்கு மத்திய அரசு தண்டனை தரக்கூடாது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறிய உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களுக்கு கூடுதல் எம்.பி.க்கள் கிடைப்பதை எப்படி ஏற்க முடியும்? பாஜக-வை பொறுத்தவரை எதையும் வெளிப்படையாக அறிவித்து முறையாக செய்வதில்லை. மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீரை ஒரே இரவில் யூனியன் பிரதேசங்களாக பிரித்து விட்டனர்.

இதேபோன்று தான், வக்பு வாரியம், ஒரே நாடு, ஒரே தேர்தல், மும்மொழிக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை என எல்லா விவகாரங்களிலும் ஒரு குறிப்பிட்ட அஜெண்டாவை வைத்துக் கொண்டே பாஜக அரசு செயல்படுகிறது. தற்போதைய மக்களவை தொகுதிகளான 543 தொகுதிகளை அப்படியே வைத்துக் கொண்டு, கூடுதலாக தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் அறிவிக்கப் போகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.

ஒட்டுமொத்த தொகுதிகள் 848 ஆக அதிகரித்தாலும், தமிழகத்துக்கு எந்த பலனும் இல்லை. தென் மாநிலங்களில் வெறும் 34 தொகுதிகள் தான் அதிகரிக்கும். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் 200 தொகுதிகள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாஜக வீழ்ச்சிக்கு தமிழகம் காரணமாக இருக்கிறது என்பதால் குறிவைத்து செயல்படுகிறார்கள். இந்தி பேசும் 10 மாநிலங்களில் மட்டுமே பாஜக கட்சி கவனம் செலுத்தினாலே மத்தியில் ஆட்சிக்கு வந்து விட முடியும்.

மீதமுள்ள 26 மாநிலங்களில் அவர்கள் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காவிட்டாலும் அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. தேசிய மக்கள் தொகை சராசரியை விட, தமிழகத்தில் மக்கள் தொகை சராசரி குறைவாக இருக்கிறது. 2050-ல் எட்ட வேண்டிய இலக்கை இப்போதே எட்டிவிட்டோம். முறையாக வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு தண்டனை கொடுக்கிறது. மாநில உரிமைகளை காப்பதில் முதல்வர் ஸ்டாலின் முன்மாதிரியாக செயல்பட்டு வருகிறார்.

தமிழகம் பலவழிகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நிதிநிலை அறிக்கை, நீட் தேர்வு, ரயில்வே திட்டங்கள், பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு அறிக்கை என பல வழிகளிலும் நம்மை வஞ்சிக்கிறார்கள். 2035-ல் எட்ட வேண்டிய உயர்கல்வி இலக்கை தற்போது எட்டிவிட்ட தமிழகத்துக்கு புதிய கல்விக் கொள்கை தேவையில்லை. முதல்வருக்கு தொகுதி மறுசீரமைப்பு குறித்து சொன்னது யார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார்.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தான் தொகுதி மறுவரையறை குறித்து கூறியவர்கள். அவர்களிடமே பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். பிறரை குறை சொல்லாமல் முழுமையாக படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் இதுபோல பேசக்கூடாது. நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டங்களில் அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. குறிப்பாக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பேசியுள்ளார். இது அங்குள்ள குறிப்புகளில் இடம்பெற்றுள்ளது.

அங்கு ஒன்று பேசிவிட்டு இங்கு ஒன்று பேசுவது என அதிமுக இரட்டை நிலைப்பாட்டுடன் உள்ளது. நடிகர் விஜய் எல்லாவற்றையும் அரசியலாகப் பார்க்கக் கூடாது. மாநிலத்தின் உரிமைகள் பறிபோகும் போது அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றாக நின்று தடுக்க வேண்டும். தார்மீக கடமைகளை இழந்து விடாமல் கூட்டாட்சி தத்துவத்தை புரிந்து கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும்” என்று அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *