சென்னை: நீர்நிலைப் புறம்போக்கில் வசிப்பவர்களை மறுவாழ்வுக்கான நிவாரணம் வழங்காமல் வீடற்றவர்களாக்க வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3-5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலிமிருந்து 550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இன்றைய பிரதிநிதிகள் மாநாட்டில் பின்வரும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: தாராளமய பொருளாதார கொள்கை அமலாக்கத்திற்கு பின் பொதுத்துறை பங்குகளை விற்பதையும் ஒன்றிய அரசு செய்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு பின் புதிதாக பொதுத் துறை நிறுவனம் எதுவும் உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டை புறக்கணிக்கும் வகையில் செயல்படும் ஒன்றிய பாஜக அரசை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிப்பதுடன் புதிய பொதுத்துறைகளை உற்பத்தி துறையில் துவக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறது.
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பது, மாநில அரசுகளுக்கு இடையிலான போட்டியாக மாறி வருகிறது. அந்நிய நேரடி முதலீடு வேலைவாய்ப்பை அதிகப்படுத்த உதவும் புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதாகும் இருக்க வேண்டும். நிரந்தரமற்ற வேலைவாய்ப்பு மூலம் சுரண்டலை தீவிர படுத்துவதாக உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக மேற்கொள்வது அவசியம். இதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை ஒன்றிய அரசும், மாநில அரசும் வெளியிட வேண்டும்.
மாநில அரசு தமிழ்நாட்டில் செயல்படாமல் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை புனரமைக்க வேண்டும். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு தேவையான சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய பாஜக அரசின் கொள்கை தடையாக உள்ளதை ஜனநாயக சக்திகள் எதிர்த்து போராட முன்வர வேண்டும். மதுரையில் எய்ம்ஸ், நெய்ப்பர் போன்றவை ஒன்றிய அரசினால் திட்டமிட்ட முறையில் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து போராட வேண்டியது அவசியம்.
தமிழ்நாட்டில் குடிமனை, குடிமனை பட்டா கேட்டு, காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 40 லட்சத்தை தாண்டி உள்ளது. தமிழக அரசு இதன்மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளைக் காரணம் காட்டி நீர்நிலைபுறம்போக்கு இடங்களில் குடியிருப்பவர்களின் வீடுகளை, மறுகுடியமர்த்துவதற்கான மாற்று ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை பல்வேறு மாவட்டங்களில் வருவாய்த்துறையினர் மேற்கொள்கின்றனர். அரசின் இந்த நடவடிக்கையால் பலர் வீடற்றவர்களாக நிர்க்கதியாக்கப்படும் நிலை உள்ளது. குடியிருக்க மாற்றுஇடம், மறு வாழ்விற்கான உரிய நிவாரணம் வழங்காமல், நீர்நிலை புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை கோருகிறது.
பல லட்சம் பேர் வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு, முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றி செயல்படுத்தப்பட்டது போல வீட்டு மனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது தமிழ்நாடு மாநில மாநாடு மாநில அரசை கோருகிறது.