தாம்பரத்தை அடுத்த காட்டாங் குளத்தூர் மற்றும் மறைமலை நகர் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் நடை மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள்.
ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு பாதசாரிகள் கடந்து செல்ல வசதியாக மறைமலைநகர் ரயில்வே நிலையம் அருகேயும் அதைத்தொடர்ந்து, அண்மையில் பொத்தேரி ரயில் நிலையம் அருகேயும் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக மறைமலை நகர் பேருந்து நிறுத்தத்திலும், அதே போல், காட்டாங்குளத்தூர் பேருந்து நிறுத்தத்திலும் பொதுமக்கள் ஜிஎஸ்டி சாலையை எளிதில் கடந்துசெல்ல வசதியாக இந்திய தேசிய சாலைகள் ஆணையம் அங்கு நடை மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்தது. அதற்கான பணிகளும் 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன.
காட்டாங்குளத்தூர் நடைமேம்பால பணியில் கான்கிரிட் தளம் அமைக்கப்பட்டு பாதி அளவுக்கு இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மறைமலைநகர் நடை மேம்பாலத்தில் கான்கிரிட் தள பணி மட்டுமே முடிந்துள்ளது. அடுத்த கட்ட பணியான இரும்பு பாலங்கள் இன்னும் நிறுவப்படவில்லை. இரு இடங்களிலும் நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் மெதுவாக நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து மறைமலைநகர் பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது, “நடைமேம்பாலத்துக்கான பள்ளங்கள் தோண்டி அப்படியே போட்டுவிட்டார்கள். இப்போதுதான் கான்கிரிட் தளம் அமைத்துள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் என ஏராளமானோர் ஜிஎஸ்டி சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. தாம்பரம் மார்க்கமாக செல்வதாக இருந்தால் ஜிஎஸ்டி சாலையை கடந்து மறுபுறம் போக வேண்டும்.
அதேபோல், செங்கல்பட்டு மார்க்கமாக பேருந்துகளில் வந்து இறங்குவோர் மறைமலை நகருக்குள் வர வேண்டுமானாலும் ஜிஎஸ்டி சாலையை கடந்தாக வேண்டும். காலையில் பேருந்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக ஜிஎஸ்டி சாலையை கடப்பவர்கள் நிறைய பேர்.
இதனால், இப்பகுதியில் அடிக்கடி காலையிலும் மாலையிலும் விபத்துகள் நேரிடுகின்றன. நடை மேம்பால பணியை விரைந்து முடித்தால் பாதுகாப்பான முறையில் ஜிஎஸ்டி சாலையை கடப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதே கோரிக்கையை காட்டாங்குளத்தூர் பகுதி பொதுமக்களும் முன்வைத்தனர். அவர்கள் மேலும் கூறும்போது, நடை மேம்பாலம் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்றன. ஆனால், தற்போது இரு புறமும் கான்கிரிட் தளத்துக்கு மேல் இரும்பு பாளங்கள் நிறுவும்பணி பாதியில் நிற்கிறது.
பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக நடைமேம்பாலத்தின் இருபுறமும் லிப்ட் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.