மறையூர் அன்னசத்திரம் பழமை மாறாமல் சீரமைக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி | Marairyur Annachatram will be renovated without changing the old one – Minister Thangam Thennarasu

1338535.jpg
Spread the love

விருதுநகர்: “மறையூரில் சிதைந்துள்ள அன்னசத்திரம் பழமை மாறாத வகையில் முழுமையாக சீரமைத்து பாரம்பரிய நினைவுச் சின்னமாக மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்படும்,” என்று நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள மறையூரில் 300 ஆண்டுகள் பழமையான ராணி மங்கம்மாள் சத்திரம் உள்ளது. இது கி.பி.1689 முதல் 1706 காலத்தில் விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் சார்பாளராக மதுரையை ஆண்டவர் ராணி மங்கம்மாள். இவர் காலத்தில் தான் மறையூர் மற்றும் நரிக்குடி சத்திரங்கள் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தனுஷ்கோடி, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கட்டப்பட்டு பிற்காலத்தில் பள்ளியாக இயங்கிவந்தது.

தற்போது போதிய பாரம்பரிப்பு இல்லாததால் சத்திரத்தை சுற்றிலும் மரங்கள் வளர்ந்துள்ளன. அதோடு, கட்டிடங்களும் இடிந்து சேதமடைந்துள்ளன. வரலாற்று ஆதாரமாக உள்ள இச்சத்திரத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றி, பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், மறையூரில் உள்ள அன்னசத்திரத்தை நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு இன்று (நவ.11) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், “மறையூரில் அமைந்துள்ள 14, 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராணி மங்கம்மாள் அன்னச்சத்திரம் இப்பகுதியில் செல்லும் வழிப்போக்கர்களுக்கு நாள்தோறும் அன்னம் வழங்கிய பெருமையுடையது. பழமை வாய்ந்த இச்சத்திரம் தொல்லியல் முக்கியத்துவம் கொண்டது. பராமரிப்பு இன்றி பாழடைந்த நிலையில் உள்ளது.இச்சத்திரத்தை சீரமைத்து, இதன் தொன்மையை மீட்டெடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளோடு‌ நேரில் ஆய்வு செய்தோம்.

எங்களோடு இணைந்து தொல்லியல் துறை அலுவலர்களும் இந்தக் கட்டடத்தின் பழமை குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வினுடைய அடிப்படையில் சத்திரத்தின் பழமை மாறாத வகையில் முழுமையாக சீரமைத்து பாரம்பரிய நினைவுச் சின்னமாக மீட்டெடுக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தொல்லியல் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவம் சார்ந்த இடங்களை பாதுகாத்திட தனி கவனம் செலுத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் நடக்கக்கூடிய வெம்பக்கோட்டை அகழ்வாய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

எனவே, தொல்லியல் வரலாற்றில் விருதுநகர் மாவட்டத்தின் முக்கியத்துவம் கருதி பல இடங்களில் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நரிக்குடியில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த வழிப்போக்கர் அன்னச்சத்திர மண்டபத்தை சிறந்த முறையில் சீரமைத்து அதை பாரம்பரிய சின்னமாக பொலிவு பெற மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கும்,” என்று கூறினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன், தொல்லியல்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அமைச்சர் ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து அன்னசத்திரத்தை சுற்றியுள்ள பகுதிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *