மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான நிவின் பாலி தனது முதல் படமான மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்பின் ஆடிஷன் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
மலையாள ஊடகமான மனோரமாவிற்கு அளித்திருக்கும் பேட்டியில் பேசியிருக்கும் நிவின் பாலி, ” ஆரம்பத்தில் “மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ படத்தின் ஆடிஷனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலில் நான் இல்லை.
வினீத் ஸ்ரீனிவாசனின் (படத்தின் இயக்குநர்) பிளாக்கை (Blog) வழக்கமாக வாசிப்பேன். ஒருமுறை அவர் அதில், ‘நான் நினைத்த நான்கு கதாபாத்திரங்களில், ஒரு கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் இன்னும் கிடைக்கவில்லை’ என்று எழுதி, அந்த கேரக்டர் எப்படி இருக்கும் என்பதையும் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

அதைப் பார்த்த உடனே என்னுடைய புகைப்படங்களை நான் ஆடிஷனுக்காக அனுப்பினேன். அந்த சமயத்தில் நான் கீழே விழுந்து கால் உடைந்திருந்ததால் ஓய்வில் இருந்தேன். இருந்தாலும் அந்த ஆடிஷனில் எப்படியாவது கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது.
என்னுடைய நண்பர் மஜு மற்றும் உறவினர் தீரஜ் ஆகியோரின் உதவியுடன் தான் நான் ஆடிஷன் நடந்த இடத்திற்கு சென்றேன். காலில் மாவுக்கட்டுடன் போய் நின்றேன். வினீத் என்னை முதன்முதலில் பார்த்தது அப்படித்தான்” என்று கூறியிருக்கிறார்.