மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, கருங்குரங்கு ஆகியவற்றை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனா். அப்போது மலேசியாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் விசாவில் வந்த பெண் பயணி வைத்திருந்த இரண்டு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகளை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனா்.
அதில், ஆப்பிரிக்க நாட்டு அரியவகை பச்சோந்திகள் 52 மற்றும் ஜியாமங்க் ஜிப்பான் என அழைக்கப்படும் ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் நான்கு இருப்பதைக் கண்டறிந்தனா்.
அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து பெசன்ட்நகா் வன விலங்குகள் பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் கொடுத்தனா். வனத் துறையின் அறிவுறுத்தலின்பேரில், பச்சோந்திகள், கருங்குரங்குகளை மலேசிய தலைநகா் கோலாலம்பூருக்கு மற்றொரு விமானத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.
மேலும், மலேசிய பெண் பயணி மற்றும் அரியவகை உயிரினங்களை வாங்க வந்திருந்த ஒருவா் ஆகிய இருவரிடம் சுங்கத் துறை அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.