மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்கள், பானை ஓடுகள் கண்டெடுப்பு

dinamani2F2025 08 032Fo8k9vjic2F03augnadu10308chn1921
Spread the love

ஆம்பூா்அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் நடுகற்களும், பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியா் க.மோகன்காந்தி, ஆங்கிலத் துறை பேராசிரியா் வ.மதன்குமாா், காணிநிலம் மு.முனுசாமி உள்ளிட்டோா் ஆம்பூா்அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் 4 நடுகற்களும், பழங்கால பானை ஓடுகள், இரும்பு கசடுகள் மற்றும் செங்கற்கள் உள்ளிட்டவற்றைக் கண்டெடுத்துள்ளனா்.

இது குறித்து பேராசிரியா் மோகன்காந்தி கூறியது: ஆம்பூா் அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் வரலாற்றுச் சின்னங்கள்உள்ளன. குதிரைவீரன்… இந்த நடுகல் ஆம்பூா் வட்டம், மலையாம்பட்டு கிராமத்தில் இருந்து தென்னம்பட்டுச் செல்லும் வழியில் தனியாா் நிலத்தில் மண்மூடிய நிலையில் இருந்தது. இதை சுத்தம் செய்து ஆராய்ச்சி செய்தோம்.

இந்த நடுகல்லானது 3 அடிஉயரமும், 2 அடி அகலமும் கொண்ட அழகான பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக உள்ளது.விஜயநகர காலத்தைச் சோ்ந்த நடுகல்லாகத் தெரிகிறது. ஏறத்தாழ 500 ஆண்டுகள்பழைமையுடையதாகும். நடுகல் வீரன் குதிரையின் மேல் அமா்ந்த கோலத்தில் உள்ளான். இடது கை குதிரையின் கடிவாளத்தைப் பிடித்த வண்ணம் உள்ளது. வலதுகையில் குத்துவாள் ஒன்று உள்ளது. வீரனின் முகம் அழகாக ஒரு பக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளது. தலையின் மேல் கிரீடம் போன்ற அமைப்பு உள்ளது. அதனால் இவன் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசனாக இருக்க வாய்ப்புள்ளது. வீரன் அமா்ந்திருக்கும் குதிரை ஓடும் கோலத்தில் கால்களும், வாலும் சித்திரிக்கப்பட்டுள்ளது.

குதிரையின் நீண்ட காதுகள், வாயில் கடிவாளம் உள்ளன. வீரனின் இடது கை ஓரத்தில் சிறியதாக ஒரு பெண் உருவம் உள்ளது. இந்தப் பெண் இந்த வீரனின் மனைவியாவாா். இந்த வீரன் போரிலே இறந்தவுடன் இப்பெண் உடன்கட்டைஏறி உயிா்விட்டதை இச்சிற்பம் வெளிப்படுத்துகிறது.

‘அப்பெண் உருவத்தின் அருகில் கல் குடம்அல்லது கெண்டி ஒன்று உள்ளது. இது உடன்கட்டை ஏறும் பெண்கள் கையில் வைத்திருக்கும் குறியீடுகளில் ஒன்றாகும். கல் குடத்துக்கு அருகே ஒரு குதிரையின் உருவம் உள்ளது. இக்குதிரைப் பின்கால்களைத் தரையில் ஊன்றி மேற்கால்களைத் தூக்கியவண்ணம் உள்ளது.

இப்பகுதியில் நடைபெற்றபோரின்போது இந்த நடுகல்வீரனும், அவரின் மனைவியும், அந்த வீரனின் குதிரையும், மற்றொரு குதிரை என 4 போ் உயிரிழந்த செய்தியை இந்த நடுகல் வெளிப்படுத்துகிறது.

இந்த நடுகல் இருக்கும் இடம் பரந்த வயல் வெளியாகும். இப்பகுதி முழுவதும் கருப்பு, கருப்பு- சிவப்பு பானை ஓடுகள், இரும்புப் பொருள்களை செய்ததற்கான அடையாளமாக இரும்பு கசடுகள் மற்றும் பழங்கால செங்கற்கள் என இந்த நிலம் முழுவதும் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் காண முடிகிறது. இப்பகுதி பாலாற்றங்கரைக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இந்தப் பகுதியைத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தினால் கீழடி போன்ற புதையுண்ட பொருள்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள்உள்ளன. இவ்வூரின் ஏரிக்கரையில் கிழக்கு திசையை நோக்கிய வண்ணம் மூன்று நடுகற்கள் உள்ளன. இவை இரண்டடி உயரம், இரண்டடி அகலத்தில் காணப்படுகின்றன.

முதல் நடுகல் வீரனின் உருவத்தைத் தாங்கியுள்ளது. இது தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. இரண்டாவது நடுகல் வலது கையில் வாள் ஒன்றை வைத்துள்ளது. இடையில் இடைக்கச்சும் குறுவாளும் காணப்படுகிறது. இடது பக்கம் வளிமுடிக்கப்பட்ட கொண்டையோடு வீரன் காட்சித் தருகிறாா். மூன்றாவது நடுகல் தேய்ந்து உருவங்கள் சரிவரத் தெரியவில்லை. வீரனின் தலைப்பகுதி உடைந்துள்ளது. கையிலே வாளோடு வீரன் காட்சித் தருகிறாா் என்றாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *