கேரள சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி “மலையாள பாஷ பில்’ தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்கள் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. கேரளா பள்ளிகளிலும், அரசுத்துறைகளிலும் மலையாள மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் காசர்கோடு உள்ளிட்ட கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள கன்னட மொழிபேசும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கர்நாடக முதல்வர் சித்தாராமையா அச்சம் தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என கர்நாடக எல்லை மேம்பாட்டு ஆணையம் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை கடந்த ஜனவரி 7-ம் தேதி சந்தித்து மனு அளித்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா முதல்வர் சித்தாராமையா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், “கேரளாவில் கன்னடம் மற்றும் தமிழ் வழி பள்ளிகளில் தொடக்கநிலை முதல் மலையாளத்தை கட்டாயமாக்கும் மசோதாவை கர்நாடகா எதிர்க்கிறது. காசர்கோடு மாவட்டத்தில் சந்திரகிரி புழாவின் வடக்கே உள்ள காசர்கோடு மற்றும் மஞ்சேஸ்வரம் தாலுகாக்களில் கன்னடம் மற்றும் துளு மொழிகளில் மக்கள் பேசிவருகின்றனர். கேரள சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா காசர்கோட்டில் உள்ள மொழி சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பிற்கு விரோதமானதாகும்” என சித்தாராமையா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தாராமையாவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாஷ பில் சம்பந்தமாக ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:
“கன்னட வழிப் பள்ளிகளில் மலையாளம் திணிக்கப்படுவதாக கூறப்படும் புகார் அடிப்படையற்றது. பள்ளிகளில் மலையாளத்தை கட்டாய முதல் மொழியாக்கும் முடிவு குறித்து கர்நாடக அரசு தெரிவித்துள்ள கவலைகள் அடிப்படையற்றவை. மொழி சிறுபான்மையினரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறும் எந்த விதியும் அந்தச் சட்டத்தில் இல்லை. மலையாளம் முதல் மொழியாக மாற்றப்படும் என்று சட்டம் கூறுவது உண்மைதான். இருப்பினும், மலையாளத்தைத் தாய்மொழி அல்லாத குழந்தைகள் அந்த மொழியுடன் மலையாளத்தையும் கற்க வாய்ப்பு வழங்கப்படும்.