இடுக்கி மாவட்டத்தின் நெடுங்கண்டம், புஷ்பகண்டம், நாலுமலை ஆகிய மலைப்பகுதிகளில் 27 சுற்றுலா வாகனங்களை மாநில காவல் துறையினர் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அங்கீகாரம் இல்லாத வகையில் சட்டவிரோத மலையேற்றத்திற்கு வந்ததாக 27 வாகனங்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்துள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து வந்த 40 பேர் கொண்ட குழுவினர், நான்குசக்கர வாகனங்களில் வந்துள்ளனர். சட்டவிரோத மலையேற்றம் செய்த அனைத்து வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்து வாகனங்களை பறிமுதல் செய்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இடுக்கி மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிகளில், விபத்துகள் காரணமாக கோடை காலத்திலும் மலையேற்றம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக நுழைந்ததால் மாநில காவல் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்று (ஜூலை 12) நண்பகல் மலையேற்றத்தைத் தொடங்கிய அவர்கள், பலத்த மழை பெய்ததால் திரும்பி செல்ல முடியாமல் மலையில் தவித்தனர். பின்னர், மலையில் வாகனங்களை விட்டு இறங்கி வந்து உள்ளூர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து மற்றும் காவல் துறையினர் சட்டவிரோதமாக மலையேற்றத்திற்கு வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மலை உச்சியில் ஆபத்தான இடத்தில் சிக்கிய வாகனங்களை ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு மீட்டனர்.