உதகை: நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் பகுதிகளில் வீசிய சூறாவளி காற்று காரணமாக மலை ரயில் பாதையில் 7 இடங்களில் மரங்கள் விழுந்ததால் சீரமைக்கும் வரை உதகை – குன்னூர் இடையே ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. மழை ஓய்ந்த நிலையில், சூறாவளி காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் பல்வேறு இடங்களிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே உதகை – குன்னூர் மலை ரயில் பாதையில் 7 இடங்களில் மரங்கள் விழுந்தது. இதனை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக ரயில் தண்டவாளம் சீரமைக்கும் வரை தற்காலிகமாக உதகை – குன்னூர் இடையே மலை ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே ஒரு மரம் விழுந்ததால் மேட்டுப்பாளையத்தில் காலை 7:10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில் குன்னூருக்கு தாமதமாக வந்து சேர்ந்தது.