பாரிஸில் தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில், மகளிருக்கான மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில், இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், கடைசி நேரத்தில் எடை 100 கிராம் கூடுதலாக இருப்பதாகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், வினேஷ் போகத்துக்கு குறைந்தபட்சம் உறுதியாகியிருந்த வெள்ளிப் பதக்கம் கிடைக்காமல் போனது. இது பெரும் சர்ச்சையாகவே, இறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டிகளை நிர்ணயிக்கப்பட்ட எடைக்குள்ளாகவே இருந்ததைக் குறிப்பிட்டு, வெள்ளிப் பதக்கம் தருமாறு வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதன் மீதான விசாரணையில், ஒலிம்பிக் முடிவடையும் ஆகஸ்ட் 11-ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, 13-ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறிருக்க, 16-ம் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று நேற்றிரவு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று அவர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு விளையாட்டு வீராங்கனைகள் நடத்திய போராட்டத்தால் ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை இந்தியா இழந்துவிட்டதாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் சஞ்சய் சிங் கூறியிருக்கிறார்.