மழையால் பட்டாசு விற்பனை பாதிப்பு: பிற்பகலில் மீண்டும் சூடுபிடித்தது | Fireworks sale affected by rain

1333632.jpg
Spread the love

சென்னை: சென்னையில் கனமழை காரணமாக பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது. காலையில் விறுவிறுப்பாக இருந்த பட்டாசு விற்பனை நண்பகலில் கனமழை பெய்து, மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாதித்தது. பிறகு பிற்பகலில் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது.

பட்டாசுகளை தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும்தான் மக்கள் அதிகமாக வாங்குவார்கள். அதுபோலவே இந்தாண்டும் தீபாவளிக்கு முதல் நாள் வாங்கிக் கொள்ளலாம் என்று மக்கள் வழக்கம்போல திட்டமிட்டனர்.

“தீபாவளிக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனால் கனமழை பெய்யாது என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் மக்கள் நேற்று காலை பட்டாசுகளை வாங்குவதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள பேரங்காடிகள், தீவுத்திடல், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, தி.நகர் போன்ற இடங்களுக்கு திரளாகச் சென்றனர்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் காலை 11.50 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது. சாலிகிராமம், விருகம்பாக்கம், வடபழனி பகுதிகளில் மிக கனமழை பெய்தது. தொடர்ந்து மயிலாப்பூர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதிகளிலும் மழை கொட்டியது. சில பகுதிகளில் காலை 8.30 மணிக்கே மழைப்பொழிவு இருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் பட்டாசு விற்பனை பாதித்தது.

இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறுகையில், “பட்டாசுகளில் பெரும்பாலானவை மழையால் பாதிக்காத அளவுக்குத்தான் பேக்கிங் செய்யப்பட்டுள்ளன. முன்புபோல மழை பெய்தால் பட்டாசுகள் வெடிக்காமல் போகும் என்ற நிலை தற்போது இல்லை. பிரபல பட்டாசு நிறுவனங்களின் பட்டாசுகளை மக்கள் நம்பிக்கையுடன் வாங்கிச் சென்று தாராளமாக வெடிக்கலாம். குறிப்பாக பட்டாசுகளின் கிப்ட் பேக்குகள் மிக நேர்த்தியாக பேக்கிங் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.

சாலிகிராமம், விருகம்பாக்கம், வடபழனி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் சற்றும் எதிர்பார்க்காத அளவுக்கு திடீரென மழை கொட்டிவிட்டது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் குடும்பத்துடன் சென்று பட்டாசு வாங்க முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் பட்டாசுகளை எடுத்து வந்தால் வீணாகிவிடும் என்ற பயம் உள்ளது. மழை பெய்யும்போதும், மழை பெய்து முடித்த பிறகும் சில மணி நேரம் மழைநீர் தேங்கி, போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருக்கும். அதனால் பிறகு வாங்கத் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் பிற்பகலில் மழை இல்லாமல் இருந்ததால் பல்வேறு இடங்களில் பட்டாசு விற்பனை மீண்டும் மும்முரமாக நடைபெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *