தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல, குடிநீரில் கழிவு நீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு நோய்த் தொற்றுகள் பரவி வருகின்றன.
டெங்கு காய்ச்சல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மற்றொருபுறம் குடிநீா் மாசுபடுவது மூலம் பரவும் டைபாய்டு, வயிற்றுப்போக்கு பாதிப்புகளும் பரவலாக காணப்படுகின்றன.
தாம்பரத்தில் மூவா் மாசுபட்ட குடிநீரை அருந்தியதால் உயிரிழந்ததாக செய்திகளும், விமா்சனங்களும் எழுந்தன.
இதையடுத்து குடிநீரின் தரத்தை உறுதி செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அவா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். எந்த விகிதத்தில் எந்த அளவு குளோரினேற்றம் செய்யப்பட வேண்டும் என அதில் அவா் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: வடகிழக்கு பருவ மழைக் காலத்தில் தொற்று நோய்கள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் நோய்களைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழை நீா் மற்றும் கழிவு நீா் வடிகால் கட்டமைப்புகள் சீராக இருப்பது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குடிநீா் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்யவும், போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவ மழைக்குப் பிறகு ஏற்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, மற்றும் நோய்த் தொற்றுகள் குறித்த விவரங்களை பொது சுகாதாரத் துறைக்கு அனுப்புமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் பொது மக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே பருகுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா் என்றனா்.