விழுப்புரத்தின் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூந்தோட்டம் ஏரி திகழ்ந்தது. 118.54 ஏக்கர் பரப்பளவை கொண்டிருந்தது. இந்த ஏரிக்கு தென் பெண்ணையாற்றில் இருந்து கோலியனூரான் பாசன கால்வாய் வழியாக நீர் வரத்து இருந்தது.
28 ஆண்டுகளுக்கு முன்பு, திமுக ஆட்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில், பூந்தோட்டம் ஏரி நிரம்பி, தண்ணீர் வெளியேறியது. இதனால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ஆனாலும், நீர்வரத்து இல்லாத ஏரி இது என முடிவு செய்து, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுலவகங்கள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளைக் கொண்ட பெருந்திட்ட வளாகம் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க திட்டமிட்டு தமிழக அரசு இந்த பூந்தோட்ட ஏரியை கையகப்படுத்தியது.
பூந்தோட்டம் ஏரி நிரம்பி வழிந்த சுமார் 3 ஆண்டுகளில், அந்த ஏரி அழிக்கப்பட்டு, அப்பகுதியில் பெருந்திட்ட வளாகம் உருவானது. ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், நீதிமன்றம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களுடன் புதிய பேருந்து நிலையமும் உருவானது. இதனை, அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி கடந்த 09-06-2000 அன்று திறந்து வைத்தார்.
திறக்கப்பட்ட கால் நூற்றாண்டு காலத்தை கடந்த போதும், ஒரு மணி நேரம் பெய்யும் மழைக்கு கூட தாக்குபிடிக்க முடியாமல் புதிய பேருந்து நிலையம் திணறுகிறது. இயற்கையின் பாதையை அழித்ததால், தனது இருப்பிடத்தை தேடி வந்து தஞ்சமடைகிறது மழை நீர்.
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் புதிய பேருந்து நிலையம் வழக்கம்போல் தத்தளித்தது. பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தண்ணீர் தேங்கி விடக்கூடாது என்பதற்காக அனைத்து நீர் வழி பாதையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், புதிய பேருந்து நிலையத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. பேருந்துகள் நீச்சலடித்து வெளியேறின.
மழைநீருடன், பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது. இதனால், பேருந்து நிலையம் உள்ளே செல்ல மக்கள் முன்வரவில்லை. நுழைவு வாயிலில் காத்திருந்து, வெளியே வந்த பேருந்துகளில் ஏறி பயணித்தனர். இதன் காரணமாக, நேற்று காலை 11 மணி வரை நுழைவு வாயிலில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. அதன்பிறகே போலீஸார் வந்து போக்கு வரத்தை சரி செய்தனர்.
இது குறித்து நகர மக்களும், பயணிகளும் கூறும்போது, “பூந்தோட்ட ஏரியை அழித்து பேருந்து நிலையத்தை கொண்டு வந்து, எங்களை கஷ்டப் படுத்து கின்றனர். ‘திமுக ஆட்சியில் ஒரு குடையின் கீழ் பெருந்திட்ட வளாகம் கொண்டு வரப்பட்டது’ என முன்னாள் அமைச்சர் பொன்முடி பெருமையுடன் பேசி வருகிறார். ஆனால், ஏரியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற, அவருக்கு வழி தெரியவில்லை. அவரது கட்சியை சேர்ந்த தற்போதைய எம்எல்ஏ லட்சுமணனும், மழைநீர் தேங்கிய புதிய பேருந்து நிலையத்தை பார்வையிடு வதுடன் தனது கடமையை முடித்து கொள்கிறார். ஆய்வு பணியுடன் ஆட்சியர்களும், கடந்து விடுகின்றனர்.
திமுக 10 ஆண்டுகளும், அதிமுக 15 ஆண்டுகளும் ஆட்சி செய்து விட்டது. விடியல் பிறக்கவில்லை. பேருந்து நிலையத்தில் தேங்கி கிடக்கும் மழை நீரை வெளியேற்று கிறோம் என்ற பெயரில், மக்களின் வரி பணத்தில் பல கோடி ரூபாயை ஆட்சியாளர்கள் விரயமாக்கி விட்டனர். நிரந்தர தீர்வு எட்டவில்லை.
மழை நீருடன் கலந்த கழிவுநீரில் தத்தளித்து நடந்து செல்வது பயணிகளுக்கு கொடுமையான ஒன்றாக இருக்கிறது. ஃபெஞ்சல் புயலில் ஒரு வாரத்துக்கு பேருந்து நிலையம் முடங்கியது. அதன்பிறகும் அதிகாரிகள் பழைய வழி பாதையை தேட முன்வரவில்லை. பூந்தோட்ட ஏரியில் இருந்து மருதூர் ஏரியை நோக்கி வெளியேறும் பாசன கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீட்டெடுத்தால் மட்டுமே தீர்வு காண முடியும்” என்று தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கூறும்போது, “புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி இருப்பதை நேரில் ஆய்வு செய்துள்ளேன். ஓரே நாளில் 17 செ.மீ மழை பெய்துள்ளதால், தண்ணீர் தேங்கி இருக்கிறது. 100 குதிரை திறன் மோட்டார் மூலமாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது. மேலும் ஒரு மோட்டாரை வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கமும் குறைந்து ள்ளது. விரைவாக தண்ணீர் வெளியேற்றப்பட்டுவிடும்” என்றார். மழை பொழிவு குறைந்ததால், புதிய பேருந்து நிலையம் நேற்று மாலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பியது.