சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 157 பேருடன் வந்த விமானம், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் ஓடிய போது விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 157 பேர் உயிர் தப்பினர்.
ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 148 பயணிகள் மற்றும் 9 விமான ஊழியர்கள் என மொத்தம் 157 பேருடன் சென்னை விமான நிலைய ஓடுபாதையில் இன்று 1.45 மணியளவில் தரையிறங்கியது. ஓடு பாதையில் விமானம் ஓடிக்கொண்டிருந்த போது, விமானத்தின் பின் பக்கத்தில் இடது பக்க டயர் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. விமானத்தில் அதிர்வுகள் ஏற்பட்டதால், விமானத்துக்குள் இருந்த பயணிகள் பயந்து அலறினர். விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை பாதுகாப்பாக ஓடுபாதையில் நிறுத்தினார்.
இதையடுத்து, விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சென்னை விமான நிலைய கிரவுண்ட் ஸ்டாப் எனப்படும் தரை தள பணியாளர்கள், ஓடு பாதையில் நின்ற விமானத்தை இழுவை வண்டிகள் மூலமாக இழுத்து வந்து விமானங்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தினர். பின்னர், பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, வழக்கமான குடியுரிமை சுங்க சோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தின் டயரை மாற்றி சீர் செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்த விமானம் மஸ்கட்டில் இருந்து பகல் 1.45 மணிக்கு சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து மஸ்கட்டுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதன்படி, இந்த விமானத்தில் மஸ்கட் செல்ல 157 பயணிகள் காத்திருந்தனர். அவர்களிடம் விமானம் கால தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று கூறிய அதிகாரிகள், அவர்களை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைத்தனர். சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானி, துணை விமானியை பயணிகள் பாராட்டினர்.