மஹாரஷ்டிரா: மாணவர்கள் படிப்புக்காக மணியடித்தவுடன் மொபைல் போன், டிவியை ஆப் செய்யும் கிராம மக்கள் | maharashtra Villagers turn off phones TVs for studies when bell rings

Spread the love

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு சிறார்கள் அனைவரின் கையிலும் மொபைல் போனைப் பார்க்க முடிகிறது. இதனால் அவர்களது படிப்புக்கு மொபைல் போன்கள் தடையாக இருக்கின்றன.

போன் பார்க்காமல் குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தால் வீட்டில் உள்ள டிவி சத்தம் அவர்களது படிப்புக்குத் தடையாக இருக்கும். இதனால் நாடு முழுவதும் சில கிராமங்களில் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதற்காக மாலை நேரத்தில் இரண்டு மணி நேரம் டிவி மற்றும் மொபைல் போன்களை ஆப் செய்யும் நடைமுறை இருந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி மாவட்டத்தில் இருக்கும் பிம்பல்குதா என்ற கிராமத்தில் மாணவர்களின் படிப்புக்காக தினமும் மாலை இரண்டு மணி நேரம் மொபைல் போன் மற்றும் டிவியை ஆப் செய்துவிடுகின்றனர்.

மக்கள் தினமும் இதைச் செய்ய மறந்துவிடக்கூடாது என்பதற்காக கிராமத்தின் மத்திய பகுதியில் மிகப்பெரிய மணி ஒன்றைத் தொங்கவிட்டு இருக்கின்றனர்.

மாலை 7 மணியாகிவிட்டால் உடனே அங்குள்ள மணியடிக்கும். மணியடித்தவுடன் அனைவரும் டிவி மற்றும் மொபைல் போன்களை ஆப் செய்துவிட வேண்டும். இத்திட்டத்தை கிராம பஞ்சாயத்துத் தலைவர் கஜானன் மற்றும் துணை பஞ்சாயத்துத் தலைவர், உள்ளூர் ஆசிரியர்கள் இணைந்து ஆலோசித்து செயல்படுத்தி இருக்கின்றனர்.

அதோடு மணியடித்ததோடு நின்றுவிடாமல் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் படிக்கிறார்களா என்றும், யார் வீட்டிலாவது டிவி பார்க்கிறார்களா என்பதையும் தனிக்குழு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு ஆய்வு செய்ய தனிக் குழுவை பஞ்சாயத்து சார்பாக அமைத்து இருக்கின்றனர்.

இது குறித்து கிராம பஞ்சாயத்துத் தலைவர் கஜானன் கூறுகையில், “எதிர்கால சந்ததிக்கு வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் தினமும் டிவி, மொபைல் போனை ஆப் செய்கிறோம்”‘ என்றார்.

7 மணிக்கு மொபைல், டிவியை ஆப் செய்துவிட்டு இரவு 9 மணிக்கு ஆன் செய்கின்றனர். கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹலகா என்ற கிராமத்திலும் இதேபோன்று மாலை 7 மணி முதல் 9 மணி வரை மொபைல் போன், டிவியை ஆப் செய்து மாணவர்களின் படிப்புக்கு உதவுகின்றனர்.

இந்தக் கிராமத்தில் மாலை 7 மணியாகிவிட்டால் அலாரம் அடித்து அனைவரையும் மொபைல் போன், டிவியை ஆப் செய்ய நினைவுபடுத்துகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *