மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை | Govt should run Manjolai Tea Estate: HC Bench advises TN Govt

1276370.jpg
Spread the love

மதுரை: மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா, மாஞ்சோலையிலிருந்து பிபிடிசி நிறுவனம் வெளியேறுவதால் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவிகள், கலைஞரின் கனவு இல்லம், அரசு ரப்பர் கழகம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் மற்றும் அங்கன்வாடிகளில் வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாற்றுப்பணி வழங்கவும், அதுவரை குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்தும், தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் மின்சார வசதி வழங்கிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை டான்டீ நிறுவனம் எடுத்த நடத்த உத்தரவிடக் கோரி ஜான் கென்னடி என்பவரும், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு மாஞ்சோலையில் தலா 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும், தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி அளிக்கப்பட்ட விருப்ப ஓய்வை ரத்து செய்யக் கோரி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ரோஸ்மேரி ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வட்கேட் ஜெனரல் ரவீந்திரன், மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் பினேகாஸ், ராபர்ட் சந்திரகுமார், வாகீஸ்வரன் ஆகியோர் வாதிட்டனர். பிபிடிசி நிறுவன வழக்கறிஞர் வாதிடுகையில், “மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த முடியாது. மாஞ்சோலையிலிருந்து வெளியேறுகிறோம். தொழிலாளர்களுக்கு தலா ரூ.2.80 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதத்தை வழங்கிவிட்டோம். மீதித் தொகையை வாங்க மறுக்கின்றனர். இந்த தொகையை நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து விடுகிறோம். தொழிலாளர்கள் விரும்பினால் அங்கு சென்று பணத்தை பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.

பின்னர் நீதிபதிகள், “மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 95 ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்துள்ளனர். அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். தேயிலை தோட்டத்தை நடத்த முடியாது என கம்பெனி கூறிவிட்டது. இதனால் தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும். இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும். அதுவரை தோட்டத் தொழிலாளர்களை மாஞ்சோலையிலிருந்து வெளியேற்ற விதிக்கப்பட்ட தடை தொடரும். விசாரணை ஜூலை 22-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *