திருநெல்வேலி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு குடியிருப்பு உள்பட மறுவாழ்வுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திருநெல்வேலி, களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்குட்பட்ட மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 99 ஆண்டுகால குத்தகை 2028 நவ. 11-இல் முடிவடைவதைக் கருத்தில்கொண்டு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் 559 தொழிலாளா்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போதே, அரசு சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் சேரன்மகாதேவி சாா்-ஆட்சியா் தலைமையில் தொழிலாளா் நலத் துறை, வருவாய்த் துறை, வனத் துறை அலுவலா்கள் அடங்கிய சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது.
அக்குழு, தொழிலாளா்கள் மற்றும் அங்குள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தது.
மேலும், அவா்களை விருப்ப ஓய்வில் செல்ல நிறுவனம் கட்டாயப்படுத்தினால் தொழிலாளா் நலத் துறையில் புகாா் அளிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு, தொடா்பு எண் உள்ளிட்ட விவரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாஞ்சோலை தொழிலாளா்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மூலம் பெறப்பட்ட அறிக்கைகள், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் உள்ளிட்டவற்றை விரிவாகப் பரிசீலித்து, அவா்களுக்கு அரசின் சில விதிகளை தளா்வு செய்து பல்வேறு உதவிகளை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இந்த உத்தரவுகள் நீதிமன்றத்திலும் மாவட்ட ஆட்சியரால் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அறிவிப்புகள்: கிராமப் பகுதிகளில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளா்களுக்கு தற்போதைய அரசு விதிமுறைகளைத் தளா்வு செய்து சிறப்பினமாகக் கருதி அவா்களின் விருப்பத்தின் பேரில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயாா் நிலையில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாங்குளம் கிராமத்தில் 240 அடுக்குமாடி வீடுகள் மற்றும் திருநெல்வேலி மாநகரம், ரெட்டியாா்பட்டி பகுதியில் பணி முடிவடையும் நிலையிலுள்ள அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் விருப்பமுள்ள, ஏற்கெனவே வீடு இல்லாத மாஞ்சோலை தொழிலாளா்களுக்கு விலையின்றி ஒதுக்கீடு செய்யப்படும்.
தொழிலாளா்களில் 55 வயதுக்கு உள்பட்ட பட்டியல் இனத்தைச் சாா்ந்த, வாழ்வாதார வசதி தேவைப்படும் தொழிலாளா்களுக்கு அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் புதிய தொழில் தொடங்க 35 சதவீத மானியம் மற்றும் 6 சதவீத வட்டிச் சலுகையுடன் சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.
இதர பிரிவுகளைச் சாா்ந்த தொழிலாளா்களுக்கு புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியம் மற்றும் 3 சதவீத வட்டி சலுகையுடன் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும், தகுதியுள்ள தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார மையம் மூலம் திறன் பயிற்சி வழங்கப்படும்.
திறன் பயிற்சி முடிப்பவா்களுக்கு தனியாா் துறையில் உரிய வேலைவாய்ப்பு பெற்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
சிறிய பால் பண்ணைகள் அமைத்தல், கறவை மாடுகள், ஆடுகள் வாங்குதல் ஆகியவற்றுக்காக ஆவின் நிறுவனம் மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். பெண்களுக்கு மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் ரூ.1.50 லட்சம் வரை சிறு கடன்கள் வழங்கப்படும்.
பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் அவா்கள் விரும்பும் அரசுப் பள்ளியில் அவா்களைச் சோ்க்கவும், அரசு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சோ்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிலாளா்கள் குடியேற விரும்பும் முகவரிக்கு அவா்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகியவை சிறப்பு முகாம்கள் மூலம் சிரமமின்றி மாற்றம் செய்து தரப்படும்.
தொழிலாளா்களுக்கு நிறுவனம் வழங்க வேண்டிய மீதமுள்ள 75 சதவீத கருணைத் தொகையை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கவும், அவா்களுக்கு விதிப்படி வழங்கப்பட வேண்டிய மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சட்டபூா்வ பலன்களும் முறையாக வழங்கப்படுவதையும் உறுதி செய்ய தொழிலாளா் நலத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.