ஆவடியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 2-வது மாடியில் சுமார் 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இன்று காலை குழந்தை விட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தது. இதனை பெற்றோர் கவனிக்க வில்லை என்று தெரிகிறது.
2-வது மாடியில்
சிறிதுநேரத்தில் அந்த குழந்தை 2-வது மாடியில் வெளிப்பக்கம் இருந்த தடுப்பு வழியாக ஏறிக்குதித்தது. பின்னர் அங்கு சரிவாக அமைக்கப்பட்டு இருந்த இரும்பு ஷீட் மீது ஏறியது. இதில் அந்த குழந்தை சரிக்கிய படி கீழே வந்தது.
ஆனால் அந்த ஷீட்டின் கடைசி பகுதியில் குழந்தை பிடித்தபடி பயத்தில் அழ தொடங்கியது. இதன் பின்னரே பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு குழந்தை ஆபத்தான நிலையில் 2-வது மாடியில் உள்ள ஷீட்டில் படுத்தபடி கிடப்பதுதெரிந்தது.
பத்திரமாக மீட்டனர்
உடனடியாக அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழந்தை மாடியில் இருந்து பயத்தில் கீழே விழுந்தாலும் அடிபடாமல் இருப்பதற்காக மெத்தை மற்றும் போர்வை விரிப்புகளை தயார் நிலையில் வைத்து இருந்தனர்.
இதற்குள் சிலர் 2-மாடிக்கு சென்று அதன் சுவற்றில் ஒருவரை ஒருவர் பிடித்தபடி நின்று அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர்.
வீடியோ
இதனை கண்ட அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூச்சலிட்டனர். குழந்தையைபெற்றோர் கவனிக்காமல் விட்டதால்தான் இதுபோன்ற சம்பவம் நடந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் கடுமையாக விமர்சித்தனர்.
பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி குழந்தையை மீட்கும் காட்சியை சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து உள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாக பரவிவருகிறது.