நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியின் சீருடையில் மாணவிகள் சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு மதுபானம் போன்ற ஒன்றை அருந்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிகள் பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு மதுவை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி தன் எக்ஸ் பக்கத்தில், “இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று போற்றப்படும் பாளையங்கோட்டையில் முருகன் குறிச்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது.
கல்வி கற்று முன்னேற வேண்டிய வயதில் மதுப்பழக்கத்தைக் கற்று மாணவச் செல்வங்கள் சீரழிவது தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது. அண்மைக்காலமாகவே பள்ளிகளிலும், பள்ளிகளுக்கு வெளியிலும் மாணவர்களும், மாணவிகளும் மது அருந்தும் சர்ச்சைக் காணொலிகள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன.