அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி (52). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக கடந்த 2018 ம் ஆண்டு மே மாதம் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நிர்மலா தேவி கைது
இதையடுத்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்மலா தேவியை கைது செய்தனர். மேலும் அவர் கல்லூரியில் இருந்து நிர்மலா தேவி மீது மாணவிகள் 5 பேரும் புகார் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் கைது செய்யப்பட்டனர். நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. 1,360 பக்கங்கள் குற்றப்பத்திகையை போலீசார் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விருதுநகரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்றது.பின்னர் வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கடந்த 26-&ந்தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்து இருந்தார்.
குற்றவாளி
ஆனால் அன்றைய தினம் நிர்மலா தேவி ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (ஏப். 29) அறிவிக்கப்பட்டது.
அதில் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற பகவதியம்மாள் தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கான தண்டனை விவரம் நாளை (30-ந்தேதி) அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
2 பேரைவிடுவித்தது
ஆனால் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2-வது மற்றும் 3 வது குற்றவாளிகளான உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய 2 பேரையும் கோர்ட்டு விடுவித்தது. அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கருத்து தெரிவித்தது.