மாநகராட்சி பள்ளியில் மாணவியைத் தாக்கிய தலைமை ஆசிரியர் விவகாரத்தில், திமுக கவுன்சிலர் தலையீட்டால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா? என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: “சென்னை புழுதிவாக்கம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்புப் படித்து வந்த 11 வயது மாணவி, வகுப்பறையில் பேனாவைத் திறந்தபோது மை கொட்டியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, தரையைத் துடைக்கும் கட்டையால் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமுற்ற சிறுமி தற்போது கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறை பாகுபாடு: ஆனால் சிறுமியை பாதிப்புக்கு உள்ளாக்கிய தலைமை ஆசிரியை மீது தமிழக காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலரின் தலையீடு காரணமாகவே தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறதா? அல்லது பாதிக்கப்பட்ட சிறுமி ஆதித் தமிழ்க்குடி என்பதால் நடவடிக்கை எடுப்பதில் பாகுபாடு காட்டுகிறதா?
எனவே சிறுமியை மிருகத்தனமாகத் தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை மீது காவல்துறை உடனடியாக வழக்கு பதிந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.