காரைக்குடி: ‘சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தனிநபர் ஈடுபட்டதாக கூறுவதில் சந்தேகம் உள்ளது’ என மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீமான், வருண்குமார் பிரச்சினையில் அரசியல் தலைவரும், ஐபிஎஸ் அதிகாரியும் பொதுவெளியில் விவாதம் செய்வது நல்லதல்ல. இதில் தலைமை செயலாளர், டிஜிபி தலையிட்டு சட்டம், நிர்வாக ரீதியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஒரே நாடு; ஒரே தேர்தல் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பாஜகவுக்கு இல்லை. இதனால் மசோதா நிறைவேறாது. அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தால் தான் சிபிஐ விசாரணை கேட்க வேண்டும். இந்த வழக்கில் அது தேவையில்லை. குற்ற வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்ட குற்றவாளி எப்படி வெளியே இருந்தார் என்பது தெரியவில்லை. காவல் துறை என்ன செய்தது? இதில் அவர் தனிநபராக ஈடுபட்டாரா என்பதில் சந்தேகம் உள்ளது. யாரேனும் உடைந்தையாக இருந்தார்களா என்பதை விசாரிக்க வேண்டும்.
ஜோசியர் ஆலோசனை படி அண்ணாமலை பரிகாரம் செய்துள்ளார். அவரது கடக ராசிக்கு அஷ்டம சனி நடக்கிறது. ஆறுபடை முருகனுக்கு காலணி இல்லாமல் நடந்து, சாட்டையடி கொடுத்தால் நல்லது என்று ஜோசியர் கூறியிருக்கலாம்.
அரசு பள்ளிகள் கட்டமைப்பை மேம்படுத்த தனியாரிடம் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்கும். கட்டணம் வசூலிக்க கூடாது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது சமுதாய பிரச்சினை. அதற்கு அரசு மீது சாயம் பூச கூடாது. சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்சோ சட்டங்களை சிலர் தவறாக பயன்படுத்தவும் செய்கின்றனர்.
ஒரு காலத்தில் அமெரிக்க டாலர் மதிப்பு நிதியமைச்சரின் வயதை தாண்டி விட்டது என்று மோடி கிண்டல் செய்தார். தற்போதைய நிலையில் நிதியமைச்சரின் தாத்தா வயதையும் டாலர் தாண்டிவிட்டது. பணமதிப்பிழப்பு, குழப்பமான ஜிஎஸ்டி, கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு நிவாரணம் கொடுக்காதது போன்ற காரணங்களால் தான் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தை சீர் செய்ய மத்திய அரசுக்கு பக்குவம் பத்தாது.
மகளிர் உரிமைத் தொகை 12 மாதங்களும் கொடுப்பதால் பொங்கல் தொகுப்பில் ரூ.1,000 வழங்காதது பெரிய குறை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.