`மாதக்கணக்கில் குப்பை அள்ளவில்லை; எல்லாம் ஓரளவுக்குத்தான்!’ – போராட்டக் களத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏ

Spread the love

திருப்பூர் மாநகராட்சியில் குப்பை பிரச்னை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. மாநகரையொட்டிய, முதலிபாளையம் கிராமத்தில் கைவிடப்பட்ட கல்குவாரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தது. அதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். அதில், முதலிபாளையம் கல்குவாரியில் குப்பைகளைக் கொட்ட திருப்பூர் மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, இடுவாய் ஊராட்சியில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. குப்பையை மேலாண்மை செய்வதற்கு போதிய இடவசதி இல்லாததால், மாநகரின் பல இடங்களிலும், சாலைகளின் ஓரத்திலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கும் அவலநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூர் தெற்குத் தொகுதி திமுக எம்எல்ஏ-வான செல்வராஜ் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டம்

போராட்டம்

இது குறித்து செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருப்பூர் மாநகராட்சி 55-ஆவது வார்டு பகுதியில் அமைந்துள்ள முத்தையன் கோயில் நகர் பகுதியில் ஒரு மாதத்துக்கும் மேலாகியும் குப்பைகள் கொட்டப்பட்டு, அள்ளப்படாமல் உள்ளது. பொதுமக்கள் என்னிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அங்கு நான் ஆய்வு செய்தபோது அதிகாரிகள் யாரும் வரவில்லை. எப்போது கேட்டாலும், `இன்று குப்பை பிரச்னை சரியாகிவிடும், நாளைக்கு சரியாகிவிடும்” என மாநகராட்சி நிர்வாகம் பொய்யான தகவலை பரப்பி வருகிறது. மாதக்கணக்கில் மாநகராட்சி நிர்வாகத்திடம் நானும் கூறிவந்தேன். ஆனால், நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். ஆளுங்கட்சிக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே போராட்டக் களத்துக்கு வந்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினர் என்றால் வீட்டில் படுத்து உறங்க முடியாது. இது மக்களுக்கான பிரச்னை. மக்களுடன்தான் நான் நிற்பேன்” என்றார்.

எம்.எல்.ஏ செல்வராஜின் போராட்டத்தை அடுத்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் அங்கிருந்த குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டது, திருப்பூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *