“மாதவிடாய் விடுமுறைவேண்டாம், வேலை கொடுக்கமாட்டார்கள்” – கர்நாடகா அரசின் முடிவுக்கு எதிராக பெண்கள் கோர்ட்டில் மனு | No Menstrual Leave, No Job: Women Petition Against Karnataka Decision

Spread the love

பெண்களுக்குச் சில மாநில அரசுகள் மாதவிடாய் கால விடுமுறை வழங்கி வருகின்றன. பன்னாட்டு நிறுவனங்களும் கூட மாதத்தில் ஒருநாள் இதற்காக பெண்களுக்கு விடுமுறை கொடுக்கின்றன. ஆனால் இந்த மாதவிடாய் கால விடுமுறை தங்களுக்குத் தேவையில்லை என்று பெண்கள் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர்.

இது போன்ற விடுமுறையால் தங்களைப் பாரபட்சமாக நடத்துவர் என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. கர்நாடகா அரசும் கடந்த நவம்பர் மாதம் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என்று அறிவித்தது.

இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் இருக்கும் 15 பெண் அதிகாரிகள் சேர்ந்து மாநில அரசின் முடிவை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கர்நாடகா உயர்நீதிமன்றம்

கர்நாடகா உயர்நீதிமன்றம்

கட்டாய விடுப்பு காரணமாக பெண்களை வேலைக்கு எடுப்பதில் பாரபட்சம் காட்டப்படலாம் என்றும், ஆண்களை விட பெண்கள் குறைந்த திறன் கொண்டவர்கள் என்று முதலாளிகள் கருத வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்தச் சிறப்பு விடுப்பை வழங்குவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே காட்டப்படும் வேறுபாடு தர்க்கமற்றது மற்றும் பகுத்தறிவு அடிப்படை அற்றது என்றும், இது பணியிடச் சமத்துவத்தை மேம்படுத்தாது என்றும் அவர்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அரசின் இந்த அறிவிப்பு தன்னிச்சையானது மற்றும் நியாயமற்றது. மேலும் சமத்துவ உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பு சட்டம் 14ஐ மீறுவதாக இருக்கிறது.

சமத்துவத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, பெண்கள் உடல் ரீதியாகப் பலவீனமானவர்கள் மற்றும் குறைந்த திறன் கொண்டவர்கள் என்ற பிம்பத்தை இது வலுப்படுத்துகிறது. இதன் மூலம் சமத்துவச் சட்டங்களின் நோக்கத்தையே இது சிதைக்கிறது. இந்தக் கொள்கை கருணை கலந்த பாலினப் பாகுபாடு போன்ற ஒரு செயலாகும்.

இது பாதுகாப்பு என்ற போர்வையில், பெண்களைப் பற்றிய பழைய காலத்து எண்ணங்களை நிலைநிறுத்துவதோடு, ஆண்களே மேலானவர்கள் என்ற ஆணாதிக்க மனப்பான்மையையும் வலுப்படுத்துகிறது” என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.

பணியிடத்தில் உண்மையான பாலினச் சமநிலை ஏற்பட வேண்டுமானால், ஆண்-பெண் என்ற பாகுபாடுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குதல், அமைப்பு ரீதியிலான தடைகளை நீக்குதல் மற்றும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான பொதுவான ஆதரவை வழங்குதல் போன்ற கொள்கைகளே அவசியம் என்று அவர்கள் கூறினர். இம்மனு நீதிபதி ஆனந்த் ஹெக்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *