`மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!’ – உச்ச நீதிமன்றம் கருத்து

Spread the love

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சில மாநிலங்களில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களும்கூட பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குகின்றன. ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதி சூர்யகாந்த், “‘பெண்களுக்குக் கட்டாய மாதவிடாய் விடுமுறை அளிப்பது அவர்களின் வேலைவாய்ப்பை பாதிப்பதாக அமையும். ஏனெனில் இத்தகைய சட்டத்தை நாம் உருவாக்கினால், முதலாளிகள் பெண்களை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

அதோடு, “இத்தகைய சட்டம் கொண்டு வந்தால் அது தொழிலாளர்களிடையே தாங்கள் ஆண்களை விடக்குறைந்தவர்கள் என்ற உளவியல் ரீதியான பயத்தையோ அல்லது எண்ணத்தையோ பெண்களுக்கு உருவாக்கிவிடும்.

விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது வேறு. ஆனால் நீங்கள் மாதவிடாய் விடுமுறையைச் சட்டபூர்வமாக்கும் தருணத்தில், யாரும் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். முதலாளிகளின் மனநிலை உங்களுக்குத் தெரியாது” என்று நீதிபதி எச்சரித்தார்.

நீதிபதி ஜோய்மால்யா பக்சி கூறுகையில், “பெண்களுக்கு ஆதரவான இது போன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவைதான். ஆனால் வேலைச் சந்தையின் யதார்த்தத்தைப் பாருங்கள். ஒரு மனித வளம் எந்தளவுக்கு ஈர்ப்பில்லாததாக மாறுகிறதோ, அந்தளவுக்குச் சந்தையில் அவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பு குறையும். ஒரு வணிக மாதிரியான கண்ணோட்டத்தில் இதைப் பாருங்கள். எந்த முதலாளியாவது இதில் மகிழ்ச்சியாக இருப்பாரா?” என்று கேள்வி எழுப்பினார்.

குறிப்பாக, “மாணவிகளாக இருந்தாலும் சரி அல்லது பணிபுரியும் பெண்களாக இருந்தாலும் சரி, மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு விடுப்பு வழங்கப்படுவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோருகிறார். ஆனால் இத்தகைய கோரிக்கைகள், அச்சத்தை உருவாக்குவதற்காக செய்யப்படுபவை ஆகும். இது போன்ற சட்டத்தால் பெண்களை கீழானவர்கள் என்று அழைப்பார்கள்” என்றும், “மாதவிடாய் என்பது அவர்களுக்கு நடக்கும் ஏதோ ஒரு கெட்ட விஷயம் என்று கூறுவார்கள்” என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *