மாநகராட்சியின் மெத்தனத்தால் வெள்ளக்காடான நெல்லை – பள்ளிகளுக்கு மழை விடுமுறை | Tirunelveli flood due to the negligence of the corporation

1380066
Spread the love

திருநெல்வேலி/ தென்காசி: தென் மாவட்டங்களில் கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் இன்றும் நீடிக்கிறது. திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனத்தால் ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல், திருநெல்வேலி மாநகரம் வெள்ளக்காடானது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இரு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது.

வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரையிலும் பலத்த மழை பெய்தது. மாலையில் மீண்டும் மழை தொடங்கி பெய்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, ராதாபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை கொட்டியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நம்பியாறு அணைப்பகுதியில் 68 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, அணைப்பகுதிகள் மற்றும் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): அம்பாசமுத்திரம்- 11.20, சேரன்மகாதேவி- 16.80, மணிமுத்தாறு- 4.80, நாங்குநேரி- 67, பாளையங்கோட்டை- 56, பாபநாசம்- 7, ராதாபுரம்- 54, திருநெல்வேலி- 31.60, சேர்வலாறு அணை- 6, கன்னடியன் அணைக்கட்டு- 15.60, களக்காடு- 12, கொடுமுடியாறு அணை- 37, மூலைக்கரைப்பட்டி- 60, மாஞ்சோலை- 31.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 84 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 135 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 350 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 92.11 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 201 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சேரன்மகாதேவி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, முக்கூடல் பகுதிகளில் தொடர்மழையால் மக்கள் வீடுகளில் முடங்கினர்.

திருநெல்வேலி மாநகரில் உள்ள கால்வாய்கள் மற்றும் மழைநீர் ஓடைகளை பருவமழைக்கு முன்னரே தூர்வாரி செப்பனிடாமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருந்ததால், நேற்றைய ஒரு நாள் மழைக்கே மாநகரம் தாக்குப்பிடிக்காமல் பல இடங்களிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். மழையால் நடைபாதை வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

17606758372006
திருநெல்வேலி சந்திப்பில் திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்.

திருநெல்வேலி டவுன் தெற்கு ரதவீதி, சந்திபிள்ளையார் முக்கு முதல் காட்சிமண்டபம் வரையிலும் வாறுகால் நிரம்பி சாக்கடை நீரும், மழைநீரும் கலந்து துர்நாற்றம் வீசியது. தண்ணீர் செல்ல வழியின்றி முழங்கால் அளவு தேங்கியால் பாதசாரிகள் செல்ல முடியவில்லை.

வண்ணார்பேட்டையில் செல்லபாண்டியன் சிலையில் இருந்து வடக்கு புறவழிச்சாலை செல்லும் பகுதி, தெற்கு புறவழிச்சாலை பகுதிகளில் குளம்போல் தேங்கிய தண்ணீரில் வாகன ஓட்டிகள் வெகு சிரமத்துடன் ஊர்ந்தபடி சென்றனர். ஒருநாள் இரவு பெய்த மழைக்கே திருநெல்வேலி மாநகரம் வெள்ளக்காடானதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சங்கரன் கோவில், சிவகிரி சுற்றுவட்டாரத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி முதல் கனமழை பெய்தது. வாசுதேவநல்லூர், தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தென்மலை பகுதிகளில் கனமழை பெய்தது.

ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் பகுதிகளில் கன மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. தொடர் மழையால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுப்பு அளிக்கப்பட்டிருந்தது. குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *