சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், செயற்கை புல்தரை அமைக்கப்பட்ட 9 விளையாட்டுத் திடல்களை தனியார் பராமரிக்க அனுமதிக்கும் மன்ற தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி வசம் உள்ளசெயற்கை புல்தரை அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டுத் திடல்களான வியாசர்பாடி முல்லைநகர், வேப்பேரி நேவல் மருத்துவமனை சாலை, திருவிக நகர் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட 9 விளையாட்டுத் திடல்களை பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி முடிவு செய்தது. இத்திடல்களை பயன்படுத்த ஒரு மணி நேரத்துக்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கவும் திட்டமிட்டிருந்தது. இதற்காக ஆன்லைன் டெண்டர் கோரவும் நடவடிக்கை எடுத்து வந்தது.
இவற்றை பராமரிக்க மாநகராட்சிக்கு நிதிச்சுமை ஏற்படுவதால் இந்தநடவடிக்கையை எடுத்திருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி பெறும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி குழு சார்பில் பெரியமேடு கால்நடை மருத்துவக் கல்லூரி எதிரில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ந.மனோகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா கண்டன உரையாற்றினார்.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில் 9 விளையாட்டுத் திடல்களைதனியாருக்கு வழங்க அனுமதித்து மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 56-வது எண் கொண்ட தீர்மானத்தை ரத்து செய்வதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.