மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைக்கு ஐகோர்ட் அதிருப்தி | High Court dissatisfied with Anti-Corruption Department’s action in Corporation tender scam case

1379652
Spread the love

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில் இரு ஐஏஎஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுமதி பெறாத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்த போது, சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கில் ஆறு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பித்திருந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத் துறை, டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர் மத்திய அரசின் அனுமதி கோரி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, டெண்டர் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி விண்ணப்பித்த போது, தமிழில் உள்ள ஆவணங்களை மொழிபெயர்த்து அனுப்பக் கூறி, விண்ணப்பத்தை மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டதாக, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் தெரிவித்தார்.

மேலும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட ஆவ்ணங்கள மொழிபெயர்க்கும் பணிக்கு கூடுதல் மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க 13 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், இந்த பணிகளை முடித்து, மத்திய அரசு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

முன்னாள் அமைச்சர், ஐஏஎஸ். அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்காத லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதி ஆனன்த் வெங்கடேஷ், அமைச்சர்கள், எம்பிக்கள் எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவுமே நகர்வதில்லை என்றும் ஆனால் மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், தனக்கு எதிராக எந்த வழக்கும் இல்லை என முன்னாள் அமைச்சர் கூறக்கூடும் எனத் தெரிவித்த நீதிபதி, மக்கள் நம்பிக்கையை பெற அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரமாக கருத வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

நடைமுறைகளுக்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டால், வழக்கு தனது வலுவை இழந்து விடும். வழக்கை அனைவரும் மறந்துவிடக் கூடும் எனத் தெரிவித்த நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்புக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை நவம்பர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *