புதுடெல்லி: “மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க செய்யக் கூடிய வகையில்தான் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா கொண்டு செல்லும். அதையும் தாண்டி இது அதிபர் தேர்தல் முறைக்குதான் வழிவகுக்கும். அடுத்தக் கட்டம் அங்குதான் போய் நிற்கும்” என்று திமுக எம்.பி. கனிமொழி காட்டமாக கருத்து தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சட்ட மசோதா குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கூட்டாட்சிக்கு எதிராக எதையும் செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 13 பேர் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. மாநில மக்கள் 5 ஆண்டுகளுக்கான ஓர் அரசை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த மாநில அரசை கலைக்க தேர்தல் ஆணையத்துக்கு உரிமை வழங்கக் கூடிய ஒரு சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மாநில பிரச்சினைகளையும், மத்தியில் உள்ள பிரச்சினைகளையும் நாடு முழுவதும் உள்ள இதர பிரச்சினைகளையும் ஒரு குழப்பத்தில் கொண்டு போய் நிறுத்தி, மாநில அரசுகளை கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க செய்யக் கூடிய வகையில்தான் இந்த சட்ட மசோதா கொண்டு செல்லும். அதையும் தாண்டி இது அதிபர் தேர்தலுக்குத்தான் வழிவகுக்கும். அடுத்தக் கட்டம் அங்குதான் போய் நிற்கும்.
மாநில சுயாட்சிக்கு, அடிப்படை உரிமைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது இந்த சட்ட மசோதா. ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையால் செலவினங்கள் குறையும் என்கிறார்கள். பல மாநிலங்களில் ஒரு கட்டமாக தேர்தல் நடத்த முடியவில்லை. 7 கட்டங்களாகக்கூட தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும் மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான தேர்தல் ஏற்பாடுகள் எப்படி நடக்கும், தேர்தலில் வேலை செய்யக்கூடிய அதிகாரிகள் எங்கிருந்து உருவாக்கப்படுவார்கள்.
இதுபோல பல கேள்விகள் இருக்கின்றன. இது தேவையில்லாமல் சுமையை அரசு மீதும் தேர்தலின் மீதும் ஏற்றக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். முக்கியமான விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காகக்கூட இருக்கலாம். அதைத்தாண்டி தன்னால் நினைத்ததை எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற மனநிலையில் கொண்டு வந்ததாகக் கூட இருக்கலாம். ஆனால், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இந்த சட்ட மசோதாவை தொடர்ந்து எதிர்த்து வருகிறார். நாங்களும் தொடர்ந்து எதிர்ப்போம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையையே நாங்கள் எதிர்க்கிறோம். அப்படி இருக்கும்போது நாடாளுமன்ற நிலைக்குழு உருவாக்கப்பட்ட பிறகுதான் இந்த சட்ட மசோதாவில் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பது தெரியும். இந்த சட்டம சோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லியிருந்தாலும், இந்த மசோதாவை நாங்கள் முற்றிலுமாகவே எதிர்க்கிறோம். முதல்வரும் இதைத் தெளிவுபடுத்தியுள்ளார். நாடாளுமன்ற நிலைக்கு குழுவில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் இல்லை’ என்று சொன்னால் அப்போது அதை ஏற்றுக் கொள்வோம்” என்று கனிமொழி தெரிவித்தார்.