மாநில உரிமைகளை காக்க உயர்மட்டக் குழு அமைப்பு: பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு | High level committee formed to protect state rights cm Stalin announced assembly

1358243.jpg
Spread the love

சென்னை: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படுகிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீ்ழ் அறிவித்தார். முன்னதாகவே அதிமுக வெளிநடப்பு செய்த நிலையில், முதல்வரின் அறிவிப்பை ஏற்க மறுத்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு பேசியதாவது: இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்று கொண்டுள்ளன. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்ற தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில், கூட்டாட்சி கருத்தியலை வலியுறுத்தும் வகையிலும், மத்திய – மாநில அரசுகளின் உறவுகளை, அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்தவும், இந்திய அரசமைப்பு சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையில் உள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்யவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்யவும், உயர்மட்ட குழு ஒன்றை அமைப்பது மிக, மிக அவசியமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்தவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராக கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்ட குழுவின் முன்னாள் துணைத்தலைவர் மு.நாகநாதன் இருப்பார்கள். இந்த உயர்நிலைக்குழு, மத்திய – மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்பு சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்யும்.

இந்திய அரசமைப்பு சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக்குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலில் இருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்யும். மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாக துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்ற கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும்.

கடந்த 1971-ல் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு மற்றும் மத்திய – மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சியினையும் உயர்நிலைக்குழு கருத்தில்கொள்ள வேண்டும். இவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும்.

உயர்மட்ட குழு தனது இடைக்கால அறிக்கையைப் ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை 2 ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும். மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த உயர்மட்டக்குழு அமைப்பது, தமிழகத்தின் நலன் காக்க மட்டுமல்ல, “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் அடிப்படையில் பரந்து விரிந்த இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கவே இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளோம்.

ஏறு தழுவுதல் போன்ற பண்பாட்டு வடிவங்களை சிதைக்கும் முயற்சிக்கு எதிராக உலகத்தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்வினை ஆற்றும் வேளையில், மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களின் பண்பாட்டு உணர்வுகளும் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. மாநிலங்களுக்கு உரிய அதிகார பகிர்வு மற்றும் நிதி பகிர்வை நாம் வலியுறுத்துவது தமிழகத்தின் நலன் கருதி மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை, காஷ்மீர் முதல் கேரளம் வரை அனைத்து மாநிலங்களின் நலன் கருதியே ஆகும். மாநில சுயாட்சி குறித்த விவாதங்களில் முதல்குரல் என்றுமே தமிழகத்தில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும். அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில், மக்களாட்சிக் கருத்தியலை சூழ்ந்து இருக்கும் கருமேகங்களுக்கிடையே தெளிவான ஒளி பாய்ச்சிட, காலம் நம்மை அழைக்கிறது. தேவை எழும்போதெல்லாம் நாட்டுக்கே வழிகாட்டும் தமிழகம், இந்த முறையும் தன்னுடைய வரலாற்று கடமையை நிறைவேற்ற முன் வருகிறது. அண்ணா காட்டிய வழியில், கருணாநிதி முன்வைத்த “மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி” எனும் முழக்கத்தினை செயல்படுத்தி மக்களாட்சி தத்துவத்தினை இந்தியாவில் முழுமையாக மலரச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக) சிந்தனைச்செல்வன் (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), வேல்முருகன் (தவாக) ஆகியோர் முதல்வரின் அறிவிப்பை வரவேற்று பேசினர். பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முதல்வரின் அறிவிப்பு ஏற்க இயலாது என கூறி, வெளிநடப்பு செய்தனர். முன்னரே வெளிநடப்பு செய்ததால் அதிமுகவினர் பங்கேற்கவில்லை.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்த 110 விதி அறிவிப்பை வரவேற்றும், பாராட்டியும், வாழ்த்தியும் இருக்கின்றனர். அதே நேரத்தில், சில அறிவுரைகளையும் கூறியுள்ளனர். அவற்றை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவினர் கலந்துகொள்ளாமல் சென்றுவிட்டார்களே என்ற வருத்தம், கவலை எனக்கு இருக்கிறது. அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் இருந்தபோதும், அந்த கட்சியை வழிநடத்திய ஜெயலலிதா இருந்தபோதும் கருத்து மாறுபடுகளும், வேறுபாடுகள் இருந்தாலும் தமிழகத்தின் உரிமைகளை விட்டுத்தர முடியாது என்ற நிலையில் இருந்து, மக்களுக்கான கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கின்றனர். ஆனால், இன்றைக்கு என்ன சூழல் என்று புரியவில்லை. கொள்கை வேறு. கூட்டணி வேறு என்று தற்போது சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் கொள்கையா என்கிற கேள்வியைதான் நாம் கேட்கவேண்டியிருக்கிறது. எனவே, தமிழகத்தின் நன்மையை கருதி, மக்களின் உரிமைகளை கருதி, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து, ஓரணியில் இருந்து செயலாற்ற வேண்டும். இதனை அவர்கள் ஏற்று அந்த பணியில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *