‘மாநில நிதி நிலைமை சரியாக இருப்பதால்தான் ரூ.2000 கொடுப்பதாக எடப்பாடி அறிவித்துள்ளார்’ – மனோ தங்கராஜ்

Spread the love

பொதுவுடைமை சிற்பி ப.ஜீவானந்தத்தின் 63-வது ஆண்டு  நினைவு தினத்தை ஒட்டி  நாகர்கோவிலில் அவரது மணிமண்டபத்தில் உள்ள  திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அனைத்திலும் அனைவரும் சமம் என்ற ஒப்பற்ற சமத்துவக் கோட்பாட்டை இந்தியாவில் ஏற்படுத்தியாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு, பொதுவுடைமைச் சித்தாந்தத்தைத் தூக்கிப்பிடித்த ஒரு மாபெரும் பொதுவுடைமை இயக்கத்தின் தலைவர்தான் அமரர் ஜீவா. அவருடைய நினைவு நாளில் மாலையிட்டு மரியாதை செய்து போற்றுகின்ற அதே நேரத்தில், அவரது சமத்துவக் கருத்துக்களை, பொதுவுடைமைக் கருத்துக்களை இந்த நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவும், இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய இந்தப் பிரிவினைவாத சக்திகளை அகற்றுவது என்றும் உறுதி ஏற்போம். அ.தி.மு.க தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரையில் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை வந்த நேரத்தில், இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறினார். அப்போது, “இது ஒரு ஏமாற்று வித்தை, மாநிலத்தில் நமக்கு நிதி இல்லை, இருக்கக்கூடிய நிதியை வைத்துக் கொடுக்கவே முடியாது’  என்று அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னார். ஆனால், தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு முதல்வர் ஸ்டாலின், ஒரு கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கி, அற்புதமான திட்டம் என்ற பெயரைப் பெற்றிருக்கின்றார்கள். இந்த நேரத்தில் எங்கள் அறிக்கையில நாங்கள் என்ன சொல்லப் போகிறோம் என்பதை அவர்கள் பாக்காமல், அவசர அவசரமாக ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக மாதம் 2,000 ரூபாய் வழங்குவதாக அவர் கூறியிருக்கிறார்.

ஜீவானந்தம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது

ஜீவானந்தம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது

மாதம் 1,000 ரூபாய் கொடுக்கவே முடியாது, நிதி இல்லை என ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது சொன்னீர்கள். நாங்கள் கொடுத்திருக்கிறோம். இப்போது மாநில நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்று நம்பித்தானே நீங்கள் ரூ.2,000 கொடுப்போம் என அறிவிக்கிறீர்கள். மாநில நிதி நிலைமை சரியாக இருக்கிறது என்ற நம்பிக்கை அ.தி.மு.க-வுக்கு வந்திருப்பதை பாராட்டுகிறேன். அன்றைக்கு நாங்கள் அறிவித்ததைக் கொடுக்க முடியாது என சொன்னார்கள். நாங்கள் அதை முடித்துக் காட்டினோம். நீங்கள் இப்போது அறிவிக்கிறீர்கள் என்றால், இதற்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கக்கூடிய இயக்கம் தி.மு.க. அதற்கு வழிகாட்டிய அரசு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *