சென்னை: சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் மூலம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக்கும் முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை விதிகளில் தனிச்சிறப்பு வாய்ந்த 110-வது விதியின்கீழ், பொது முக்கியத்துவம் வாய்ந்தபொருள் பற்றி அவசரமாக அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பின்கீழ் எந்த விதமான விவாதமும் கூடாது.
அந்த வகையில், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 9 நாட்கள்காலை, மாலை இரு வேளையும் பேரவை கூடி, மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தொடரில் முதல்வர்ஸ்டாலின், சில முக்கிய அறிவிப்புகளை 110 விதியின்கீழ் வெளியிட்டார்.
அந்த வகையில், ‘முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9,324.49 கோடியில் 16,596 கி.மீ. நீளமுள்ள சாலைகள், 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்கதிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 2 ஆண்டுகளில் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும்’ என்று ஜூன் 24-ம் தேதி அறிவித்தார்.
‘வரும் 2026 ஜனவரிக்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசுப் பணியிடங்களுக்காக, டிஎன்பிஎஸ்சி மூலம் 17,595 பணியிடங்கள், டிஆர்பி மூலம் 19,260 ஆசிரியர்கள், எம்ஆர்பி மூலம் 3,041 மருத்துவ பணியிடங்கள், சீருடை பணியாளர்தேர்வாணையம் மூலம் 6,688 பணியிடங்கள் என 46,584 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுதவிர, சமூகநலம், நகராட்சி நிர்வாகம், குடிநீர்வழங்கல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் காலியாக உள்ள 30,219 பணியிடங்கள் நிரப்பப்படும். ஒட்டுமொத்தமாக 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்’ என 25-ம் தேதி அறிவித்தார்.
`ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்கலைஞர் பெயரால் அமைக்கப்படும்’ என 27-ம் தேதி அறிவித்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தமிழகத்தில் 1,93,891 அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 28,643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும். முதல்கட்டமாக, இந்த ஆண்டில் சென்னையில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப் பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர், திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப் பகுதி ஆகியவற்றில் உள்ள6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம்மற்றும் புதிய திட்டப் பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும் என 28-ம் தேதி அறிவித்தார்.
மொத்தத்தில், 110 விதியின்கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும், இளைஞர்களின் அரசுவேலைவாய்ப்புக்கும் முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.