சிவகங்கை மாவட்டம், மானாமதுரை – கிருஷ்ணராஜபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன். பொறியியல் பட்டதாரியான இவர், பக்கத்து ஊரில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட தகராறில் அவர்களைக் கொலைசெய்ய முயன்றதாகக் கூறி, மானாமதுரை காவல்துறையினரால் 6-3-2026 அன்று கைதுசெய்யப்பட்டார். கைது நடவடிக்கையின்போது போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெலிசன் கீழே விழுந்து, அவருக்குக் காலில் காயம் ஏற்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கால் காயத்துக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆகாஷ், 8-3-2026 அன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
ஆகாஷின் பெற்றோர்களை காவலர்கள் சாதியை சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

ஆகாஷ் டெலிசன் இறப்பதற்கு முன் நீதித்துறை நடுவரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் காவல்துறையினர் தன்னுடைய காலை உடைத்ததாக கூறியிருந்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றம் செய்ய சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிட்டனர்.
மேலும் ஆகாஷின் உடல் உடற்கூறாய்வு செய்து அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும், காவல்துறையில் உள்ள சிசிடிவி வீடியோக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து ஆகாஷின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, அவர் உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்.ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், சரத்குமார், மனோகரன், காலீஸ்வரன் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.