ரயில் பாதை பராமரிப்புப் பணிக்காக திருச்சி- ராமேசுவரம் பயணிகள் ரயில் இந்த மாதம் 31-ஆம் தேதி வரை மானாமதுரை- ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது.
திருச்சியிலிருந்து நாள்தோறும் பயணிகள் ரயில் (வண்டி எண் 16850) காலை 7.05 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.25 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். மறுவழித்தடத்தில் பிற்பகல் 2.05 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு, இரவு 8.10 மணிக்கு திருச்சியைச் சென்றடையும்.
தற்போது பாம்பன் ரயில் பாலம் வேலை நடந்து வருவதால் இந்த ரயில் ஏற்கெனவே ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மானாமதுரை- ராமநாதபுரம் இடையே ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரயில் சேவை கடந்த மாதம் 30- ஆம் தேதி முதல் மானாமதுரை-ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டது.
வழக்கமான நேரத்தில் திருச்சியிலிருந்து புறப்படும் இந்த ரயில் மானாமதுரையுடன் நிறுத்தப்பட்டு, பின்னா் மாலை 4.30 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு திருச்சியைச் சென்றடையும். இந்த மாதம் 31-ஆம் தேதி வரை இந்த ரயில் சேவை மாற்றம் அமலில் இருக்கும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.