“மாறுபட்ட கருத்துகளால் அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு விசாரணையில் சந்தேகம்” – அண்ணாமலை | Doubts over Anna University student sexual harassment case: Annamalai

1344808.jpg
Spread the love

சென்னை: சென்னை காவல் ஆணையர், உயர் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருவது, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நேற்று சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாணவி பாதிக்கப்பட்டது தொடர்பாக, பல்கலைக்கழகத்தில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது,” என்றார்.

ஆனால், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், “பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலியல் துன்புறுத்தல் தடுப்புக் குழுவுக்கு எந்த புகாரும் முதலில் வரவில்லை. காவல்துறை மூலமாகவே, மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தெரியவந்தது,” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காவல் ஆணையர் அருணும், உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியனும் மாறுபட்ட கருத்தை தெரிவித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: “அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு விசாரணை செல்லும் விதம், பல சந்தேகங்களை எழுப்புகிறது. உயர் கல்வித்துறை அமைச்சர், ஊடகங்களில் பேசுகையில், முதலில் காவல்துறையிடம் புகார் அளித்த பிறகே, பல்கலைக்கழகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார்.

ஆனால், சென்னை காவல் ஆணையர், பல்கலைக்கழகத்தின் குழு மூலமாகவே காவல் துறைக்குப் புகார் வந்தது என்று கூறுகிறார். ஏன் இத்தனை முரண்பாடுகள்? உண்மையில் யாரைக் காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? உண்மையில் என்ன நடந்தது? அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மாணவி, குற்றவாளிக்கு தொலைப்பேசி அழைப்பு வந்ததாகத் தெரிவித்ததாகவும், சார் என்று கூறி, குற்றவாளி பேசியதாகவும் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், அதனை அப்படியே வெளிவராமல் மறைக்கும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது. இந்தக் குற்றத்தில் தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழக பாஜக இதனை விடப்போவதில்லை. பிரச்சினையை மடைமாற்றி, உண்மையை மறைத்துவிடலாம் என்ற நோக்கம் திமுக அரசுக்கு இருக்குமேயானால், திமுக அரசுக்கும் இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பதாகத் தான் கருத முடியும்,” எனறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *